சசிகலா தலைமையின்கீழ் பணியாற்ற அ.தி.மு.க. செயற்குழுவில் தீர்மானம்

சென்னை:

சென்னை வானகரத்தில் நடைபெற்று வரும் அ.தி.மு.க. பொதுக்குழுவில் ஜெயலலிதாவின் படத்துக்கு அக்கட்சி தலைமை நிர்வாகிகள் மலர்தூவி மரியாதை செய்தனர். பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் மறைவை தொடர்ந்து பதவி காலியாக உள்ள அக்கட்சியின் புதிய தலைமையை தேர்வு செய்வதற்கான அவசர செயற்குழு, பொதுக்குழு இன்று காலை சென்னை வானகரத்தில் கூடியது.

இந்த கூட்டத்துக்கு அவைத்தலைவர் மதுசூதனன் தலைமை தாங்கினார். தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், கட்சியின் மூத்த தலைவர்கள் செங்கோட்டையன், தம்பித்துரை, பொன்னையன், உள்ளிட்டோர் முன்னிலையில் முதலில் செயற்குழு கூட்டம் தொடங்கியது.

மேடையில் வைக்கப்பட்டுள்ள மறைந்த பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செய்யப்பட்டது. பின்னர், அரங்கத்தில் இருந்த அனைவரும் எழுந்து நின்று ஜெயலலிதாவின் மறைவுக்கு 2 நிமிடங்கள் மவுனமாக அஞ்சலி செலுத்தினர்.

பின்னர், ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா தலைமையின்கீழ் விசுவாசமாக கட்சிப் பணியாற்றுவோம் என அனைவரும் உறுதி ஏற்றனர். சசிகலாவை அ.தி.மு.க.வின் புதிய பொதுச்செயலாளராக நியமிக்கவும் செயற்குழுவில் ஒருமனதாக ஒப்புதல் அளிக்கப்பட்டது.

ஜெயலலிதாவின் மறைவுக்கு இரங்கல், சசிகலாவின் நியமனம் உள்ளிட்ட 14 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு பொதுக்குழுவின் ஒப்புதலுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அ.தி.மு.க.வின் புதிய பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source: Maalaimalar