அதிமுக பொதுச்செயலராக சசிகலா நியமனம்: ஓ. பன்னீர்செல்வம்

சென்னை: அதிமுக. செயற்குழு, மற்றும் பொதுக்குழு கூட்டம் இன்று காலை 9.30 மணிக்கு சென்னை, வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

முதலில் ஜெயலலிதா மறைவுக்கு எழுந்து நின்று இரங்கல் தெரிவித்தனர். அவர் பயன்படுத்திய நாற்காலியில் ஜெயலலிதாவின் படத்தை வைத்து மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

செயற்குழு கூட்டத்தில் ஜெயலலிதா மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்தை கண்ணீர் மல்க வாசித்தார் முதல்வர் ஒ.பன்னீர் செல்வம். அப்போது அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களும் கண்ணீர் சிந்தினர்.

பொதுக்குழுவில் மொத்தம் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஜெயலலிதாவிற்குப் பின்னர் வி.கே. சசிகலாவிடம் அதிமுக தலைமை பொறுப்பு ஒப்படைக்கப்படுகிறது என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர் செல்வம், அதிமுக பொதுச்செயலாளராக கட்சியின் சட்ட திட்ட விதிகளுக்கு உட்பட்டு நியமனம் செய்யப்பட்டுள்ளதாக கூறினார். செங்கோட்டையின் இந்த தீர்மானத்தை வழி மொழிந்தார்.

இதனையடுத்து ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி, தம்பித்துரை ஆகியோரும் போயஸ் தோட்டத்திற்கு சென்று சசிகலாவை சந்தித்து தீர்மானத்தை வழங்கினர்.

Source: OneIndia