சசிகலா சம்மதத்திற்காக 2 மணி நேரம் நீடித்த பொதுக்குழு… நிர்வாகிகள் காத்திருப்பு

சசிகலா சம்மதத்திற்காக 2 மணி நேரம் நீடித்த பொதுக்குழு… நிர்வாகிகள் காத்திருப்பு

சென்னை: பொதுச் செயலாளராக சசிகலாவை நியமித்து அதிமுக பொதுக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு சசிகலா ஒப்புதல் தெரிவிக்கும் வரை பொதுக் குழு கூட்டம் 2 மணி நேரம் நீடிக்கப்பட்டது. அதுவரை அதிமுக நிர்வாகிகள் பொதுக் குழு கூட்டத்தில் காத்திருந்தனர்.

அதிமுகவின் பொதுக் குழுக் கூட்டம் இன்று சென்னை வானகரம் ஸ்ரீவாரி வெங்கடாஜலபதி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முதலாவதாக ஜெயலலிதா மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்தத் தீர்மானத்தை கண்ணீர் மல்க முதல்வர் ஒ.பன்னீர் செல்வம் வாசித்தார்.

இதனைத் தொடர்ந்து, மீதமுள்ள 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் மிக முக்கியமான தீர்மானமான ஜெயலலிதாவிற்குப் பின்னர் வி.கே. சசிகலாவிடம் அதிமுக தலைமை பொறுப்பு ஒப்படைக்கப்படுகிறது என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்தத் தீர்மானத்தின் நகலை எடுத்துக் கொண்டு முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தலைமையிலான 5 பேர் கொண்ட குழு போயஸ் கார்டன் நோக்கிப் பறந்தது. அங்கு சென்ற அந்தக் குழு சசிகலாவிடம் தீர்மான நகலை ஒப்படைத்தது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அதிமுகவின் பொதுச் செயலாளர் பொறுப்பை ஏற்க சசிகலா சம்மதம் தெரிவித்தார் என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அதே நேரத்தில், வானகரத்தில் நடைபெற்ற பொதுக் குழுவிலும் ‘சின்னம்மா’ சம்மதம் தெரிவித்தார் என்று அறிவிக்கப்பட்டது. இதன் பிறகே கூட்டம் முடிவடைந்து நிர்வாகிகள் வீட்டிற்கு கிளம்பினர்.
ஒரு மணிநேரம் நடைபெறும் வகையில் திட்டமிடப்பட்டிருந்த அதிமுக பொதுக் குழுக் கூட்டம் இன்று சுமார் 3 மணி நேரம் நடைபெற்றது. சசிகலா பொதுச் செயலாளராக பொறுப்பேற்க வேண்டும் என்ற தீர்மான நகலைப் பெற்றுக் கொண்டு சசிகலா வானகரம் வந்து நன்றி தெரிவிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் தீர்மான நகலை சசிகலா பெற்று சம்மதம் தெரிவித்தாரே தவிர பொதுக்குழுவிற்கு வரவில்லை.

இதனால், காலை 9.30 மணிக்கு தொடங்கி 10.30 மணிக்கு முடிய வேண்டிய கூட்டம் சுமார் 2 மணி நேரம் தாமதமாக 12.30 மணியளவில் முடிந்தது.

Source: OneIndia

Author Image
murugan