ராமமோகன ராவ் விவகாரம் அப்படியே அடங்கிப் போனது ஏன்?.. மு.க.ஸ்டாலின் சந்தேகம்

சென்னை: தமிழகத்தில் வருமான வரித்துறையினர், தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ் வீட்டில் ரெய்டு நடத்தினர். தமிழக நிர்வாகம் நடக்கும் தலைமைப் பீடமான தலைமைச் செயலகத்திற்குள் மத்திய துணை ராணுவத்தின் துணையுடன் ரெய்டு நடத்தப்பட்டது. இவை எல்லாம் ஊழல் நடவடிக்கை என்றால், அடுத்த கட்ட நடவடிக்கைகள் ஏன் திடீரென்று அடங்கி போய்விட்டன என்பது புரியாத புதிராக இருக்கிறது என்று திமுக பொருளாளரும்,சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் கேட்டுள்ளார்.

இத்தனை நாள் பரபரப்பான செய்தியாக தமிழகத்தில் நடைபெற்ற ரெய்டுகள், தலைமைச் செயலாளராக இருந்த ராமமோகன ராவின் சவால் பேட்டிக்குப் பிறகும், மேல் நடவடிக்கை இல்லாமல் தயங்கி நிற்பது ஏன், யாரைக் காப்பாற்ற இந்தத் தயக்கம் என்பது எல்லாம் மூடி மறைக்கப்பட்டு, மூடு பனியாகவே இருக்கிறது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கை என்ற பெயரால் மக்களைத் துன்புறுத்திய மத்திய அரசின் அலட்சியமான போக்குக்கு, தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் தரப்பில் நடந்த போராட்டங்கள் மற்றும் தொடர்ந்து நிலவும் எதிர்ப்புகளை சமாளிக்க இந்த ரெய்டுகள் நடந்ததா என்ற கேள்வியும் அனைவரது மனதிலும் எழுந்துள்ளது என்றும் அவர் கேட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

குதிரையை விட்டு விட்டு

‘குதிரையை விட்டு விட்டு லாயத்தை பூட்டுவது’ என்பது மத்திய அரசின் கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கைக்கு சரியான உதாரணமாக திகழ்கிறது. 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று, நவம்பர் 8 ஆம் தேதி இரவில் பிரதமர் நரேந்திர மோடி ஓர் அறிவிப்பை வெளியிட்டார். பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்றிக் கொள்ள கொடுக்கப்பட்ட கால அவகாசமும் டிசம்பர் 31 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. ஆனால் அந்த அறிவிப்பால் மக்களுக்கு, குறிப்பாக ஏழைகள், விவசாயிகள், சிறு வணிகர்கள், மீனவர்கள், தொழிலாளர்கள், மாத ஊதியம் பெறுவோர், நடுத்தர வர்க்கத்தினர் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மக்களுக்கும் ஏற்பட்ட மிக மோசமான பாதிப்புகள் இதுவரை தீரவில்லை என்பது மிகவும் வேதனை ஏற்படுத்துகிறது.

இமாலய துன்பம்

இமாலய துன்பம்

கறுப்பு பண ஒழிப்பு வரவேற்கப்பட வேண்டியது தான். ஆனால் மத்திய அரசின் குளறுபடிகள் எல்லாம் கறுப்புப்பண முதலைகளுக்கு எந்த நெருக்கடியையும் தராமல், ஏழை-நடுத்தர மக்களுக்கு இமாலய துன்பத்தை கொடுத்திருப்பதை யாராலும் மறக்க முடியாது. வங்கிகளில் பணம் எடுக்கவோ அல்லது டெபாசிட் செய்யவோ மக்கள் இன்னும் அவதிப்படும் அசாதாரண சூழல் தொடருகிறது. ஏ,டி.எம் மையங்களில் பகல்-இரவு என பாராமல் மக்கள் வரிசையில் நிற்க வேண்டிய அவலமும், பெரும்பாலான ஏ.,டி.எம்.கள் மூடப்பட்டிருக்கும் நிலைமையும் தொடர்கின்றன.

பெரும் துயரில் விவசாயிகள்

பெரும் துயரில் விவசாயிகள்

கூட்டுறவு வங்கிகளின் செயல்பாடுகள் முடக்கப்பட்டதால் விவசாயிகள் பெரும் துயரத்திற்கு ஆளாகி, அவர்களது வாழ்வாதாரம் நிலை குலைந்துள்ளது. கிராமப் பொருளாதாரம் மட்டுமின்றி கிராம மக்களின் சகஜ வாழ்க்கையும் சேர்ந்து பாதிப்புக்குள்ளாகி இன்னும் சொல்லொனா அவதிப்படுகிறார்கள். “குறுகிய கால சிரமம், நீண்ட கால பயன்” என்று பிரதமரும், மத்திய அரசும் திரும்ப திரும்ப சொல்லி கொண்டிருந்தாலும் இன்றைக்கு மக்களுக்கு எஞ்சியிருப்பதும், நிலைத்து நிற்பதும், “நீங்கா துயரம் மட்டுமே” என்பதை பார்க்கும்போது, கறுப்புப் பணம் ஒழிப்பு என்ற ஒரு மிக முக்கியமான முடிவை மத்திய அரசு எந்தவித திட்டமிடலும் இன்றி எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற விதத்தில் அறிவித்து உள்ளது என்பது வெட்ட வெளிச்சம் ஆகியிருக்கிறது.

தீரா குழப்பத்தை ஏற்படுத்திய வங்கிகள்

தீரா குழப்பத்தை ஏற்படுத்திய வங்கிகள்

இதுவரை ரிசர்வ் வங்கி வெளியிட்ட 100 க்கும் மேற்பட்ட உத்தரவுகளும், அடிக்கடி விதிமுறைகளை மாற்றி மக்களுக்கு தீரா குழப்பத்தை ஏற்படுத்திய நிர்வாக சீர்கேடான செயல்கள் எல்லாம் மத்திய அரசின் இந்த திட்டம் எந்த அளவிற்கு அலட்சியமாக செயல்படுத்தப்பட்டுள்ளது என்பதை உணர்த்துகிறது. முதலில் கறுப்பு பணம் என்று துவங்கிய மத்திய அரசு இப்போது ரொக்கமில்லா பணப் பரிவர்த்தனை என்ற அளவில் வந்து நிற்கிறது.

விவாதம் நடத்த மறுத்த மத்திய அரசு

விவாதம் நடத்த மறுத்த மத்திய அரசு

இவை எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தது போன்ற கொடுமை என்னவென்றால், பாராளுமன்றத்தில் இது குறித்த முழு விவாதத்திற்கு, மத்தியில் உள்ள பாஜக அரசோ, பிரதமரோ முன் வர பிடிவாதமாக மறுத்தது தான். பாராளுமன்ற ஜனநாயகத்தில் நம்பிக்கை வைத்துள்ள எந்த அரசும் இது போன்ற விவாதத்திற்கு வழி விட மறுத்தது இல்லை. ஆனால் பாஜக அரசு இந்த விஷயத்தில் பாராளுமன்றத்தில் 125 கோடி மக்களின் பிரச்சனையை விவாதிக்க மறுத்து இந்திய ஜனநாயகத்திற்கு ஏற்படுத்திய தலைகுனிவு, வரலாற்றில் கறை படிந்த பக்கங்களாகவே இருக்கும்.

மன்னிக்கவே முடியாத தமிழக அரசு

மன்னிக்கவே முடியாத தமிழக அரசு

மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் மக்கள் படும் துயரங்களைக் கண்டு அண்டை மாநில அரசுகள் அவசர நடவடிக்கைகளை மேற்கொண்ட நிலையில், தமிழகத்தில் இருக்கும் அதிமுக அரசு மக்களின் சிரமங்களைப் போக்க முயலாமல், வங்கி வரிசைகளில் பசியும் பட்டினியுமாக பல நாட்கள் நின்றதை கண்டு கொள்ளாமல் இருந்ததை மக்கள் நிச்சயம் மறக்கவும் மாட்டார்கள், மன்னிக்கவும் மாட்டார்கள்.

ராவ் வீட்டில் ரெய்டு

ராவ் வீட்டில் ரெய்டு

இந்த உயர் மதிப்புடைய பண நீக்க நடவடிக்கையைத் தொடர்ந்து, தமிழகத்தில் வருமான வரித்துறையினர், தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ் வீட்டில் ரெய்டு நடத்தினர். தமிழக நிர்வாகம் நடக்கும் தலைமைப் பீடமான தலைமைச் செயலகத்திற்குள் மத்திய துணை ராணுவத்தின் துணையுடன் ரெய்டு நடத்தப்பட்டது. அதற்கு முன்பு மணல் கான்டிராக்டர் சேகர் ரெட்டி வீடு மற்றும் அலுவலகத்தில் ரெய்டு செய்யப்பட்டது. சேலம் மற்றும் கடலூர் மத்திய கூட்டுறவு வங்கிகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினார்கள். இந்த சோதனைகள் எல்லாம் கறுப்பு பண ஒழிப்பு நடவடிக்கை மட்டுமா அல்லது ஊழலுக்கு எதிரான நடவடிக்கையா என்பது இதுவரை தெளிவுபடுத்தப்படவில்லை.

ராவ் விவகாரம் ஏன் அடங்கிப் போனது?

ராவ் விவகாரம் ஏன் அடங்கிப் போனது?

இவை எல்லாம் ஊழல் நடவடிக்கை என்றால், அடுத்த கட்ட நடவடிக்கைகள் ஏன் திடீரென்று அடங்கி போய்விட்டன என்பது புரியாத புதிராக இருக்கிறது. இத்தனை நாள் பரபரப்பான செய்தியாக தமிழகத்தில் நடைபெற்ற ரெய்டுகள், தலைமைச் செயலாளராக இருந்த ராமமோகன ராவின் சவால் பேட்டிக்குப் பிறகும், மேல் நடவடிக்கை இல்லாமல் தயங்கி நிற்பது ஏன், யாரைக் காப்பாற்ற இந்தத் தயக்கம் என்பது எல்லாம் மூடி மறைக்கப்பட்டு, மூடு பனியாகவே இருக்கிறது. கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கை என்ற பெயரால் மக்களைத் துன்புறுத்திய மத்திய அரசின் அலட்சியமான போக்குக்கு, தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் தரப்பில் நடந்த போராட்டங்கள் மற்றும் தொடர்ந்து நிலவும் எதிர்ப்புகளை சமாளிக்க இந்த ரெய்டுகள் நடந்ததா என்ற கேள்வியும் அனைவரது மனதிலும் எழுந்துள்ளது.

50 நாளாகியும் சிரமம் போகவில்லை

50 நாளாகியும் சிரமம் போகவில்லை

“எல்லாம் சரியாகி விடும். 50 நாட்கள் பொறுத்துக் கொள்ளுங்கள்” என்று பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கேட்டு கொண்டார். ஆனால் இன்று 50 நாட்கள் கழிந்தும் மக்களின் சிரமங்கள் குறையவில்லை. இனிமேலும் சீராக வாய்ப்பு இல்லை என்றும், இந்திய பொருளாதாரம் பின்னுக்கு தள்ளப்பட்டு, நாட்டு வளர்ச்சி வீழ்ச்சியை சந்திக்கும் அபாயக் கோட்டில் நிற்கிறது என்றும், பிரபல பொருளாதார நிபுணர்கள் அச்சம் தெரிவிக்கும் நிலை ஏற்பட்டிருப்பது மிக மிக துரதிருஷ்ட வசமானது. ஆகவே இதுவரை மக்கள் படும் இன்னல்களை கண்டு கொள்ளாமல் இருந்தது போல் இனியும் மத்திய அரசு வேடிக்கை பார்க்காமல், வங்கி செயல்பாடுகளை சீர் செய்ய வேண்டும்.

தேவையான ரூபாய் நோட்டுக்களைத் தர வேண்டும்

தேவையான ரூபாய் நோட்டுக்களைத் தர வேண்டும்

வங்கிகளுக்கு தேவையான புதிய ரூபாய் நோட்டுக்களை உடனடியாக வழங்கி பணம் எடுப்பது, திருமண செலவு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்கு மத்திய அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை தளர்த்தி சகஜமான வங்கி செயல்பாடுகள் திரும்பவும், உரிய நடவடிக்கைகளை உடனே எடுக்க வேண்டும். அதுமட்டுமின்றி இந்த திட்டத்தால் பொருளாதாரத்திற்கு என்ன பயன் கிடைத்துள்ளது, எத்தனை கருப்பு பண முதலைகள் பிடிபட்டுள்ளார்கள் என்பது குறித்தும் மக்களுக்கு தெரியப்படுத்த ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் என மத்திய அரசை கேட்டு கொள்கிறேன் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

Source: OneIndia