சென்னை எஸ்.பி.ஐ. காப்பீட்டு நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து

சென்னை எஸ்.பி.ஐ. காப்பீட்டு நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து

சென்னை:

சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவன் எதிரே எஸ்.பி.ஐ. காப்பீட்டு நிறுவன கிளை உள்ளது. இங்கு இன்று காலையில் வழக்கம்போல் பணியாளர்கள் பணியை தொடங்கியபோது, அந்த கட்டிடத்தின் மேல் மாடியில் திடீரென கரும்புகை எழுந்தது. சிறிது நேரத்தில் தீப்பிடித்து மளமளவெனப் பரவியது. இதனால் தொழிலாளர்கள் வெளியேறினர்.

இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்பு படை வீரர்கள் 3 வாகனங்களில் வந்து தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். கொளுந்துவிட்டு எரிந்த தீயை சுமார் அரைமணி நேரம் போராடி கட்டுப்படுத்தினர். ஆனால், கம்ப்யூட்டர் உள்ளிட்ட பல்வேறு மின்சாதன பொருட்கள் எரிந்ததால் கரும்புகை வெளியேறியது. இதையடுத்து புகையை கட்டுப்படுத்தி மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

அதேசமயம் உள்ளே யாராவது சிக்கியிருக்கிறார்களா? என்பதை கண்டறிந்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும் அந்த கட்டிடத்தின் வெளியில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தது.

குளிர்சாதனப் பெட்டியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

Source: Maalaimalar

Author Image
murugan