Press "Enter" to skip to content

பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற 50 நாள் ‘கெடு’ இன்று முடிந்தது – பணம் தட்டுப்பாடு நீங்குமா?

சென்னை:

நாட்டில் புழக்கத்தில் இருந்த உயர்மதிப்புடைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கடந்த மாதம் 8-ந்தேதி மத்திய அரசு அறிவித்தது.

கருப்பு பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிப்பதற்காக பிரதமர் மோடி எடுத்துள்ள இந்த அதிரடி நடவடிக்கை நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற பல்வேறு கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி விதித்தது. அதே நேரத்தில் புதிய ரூபாய் நோட்டுகளை பெறவும் கடும் நிபந்தனைகளை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தியது.

ஏ.டி.எம்.-ல் இருந்து ரூ.2000 மட்டுமே தினமும் பெற முடியும். வாரத்திற்கு ரூ.24 ஆயிரம் வரை மட்டுமே வங்கி வாடிக்கையாளர்கள் எடுக்க அனுமதிக்கப்பட்டது.

புதிய ரூபாய் நோட்டுகளை அதிகளவு புழக்கத்தில் விடாததாலும் ஏ.டி.எம்.களும் முழுமையாக செயல்படாததாலும் பொதுமக்கள் பணம் எடுக்க முடியாமல் கடந்த 50 நாட்களாக சிரமப்பட்டு வருகிறார்கள்.

இதற்கிடையில் வங்கிகளுக்கு கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக புதிய ரூபாய் நோட்டுகள் குறைந்த அளவில் சப்ளை செய்யப்பட்டு வருவதால் தேவையான அளவு பணம் எடுக்க முடியாமல் மக்கள் திண்டாடி வருகிறார்கள்.

பணம் தட்டுப்பாடு வங்கிகளில் இதுவரை நீடித்து வருவதால் வாடிக்கையாளர்கள் பல மணி நேரம் காத்து கிடக்கும் நிலை இன்னும் இருந்து வருகிறது.

சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் சாதாரண மக்கள் மட்டுமின்றி நடப்பு கணக்கு வைத்துள்ள பல்வேறு தொழில், நிறுவனங்கள் நடத்தக்கூடியவர்களும் பணம் பெற முடியாமல் பெரும் சங்கடத்திற்கு ஆளாகி வருகிறார்கள்.

பணம் பிரச்சினையால் வியாபாரமும் தொழில்களும் முடங்கி உள்ளன. பணம் புழக்கம் எப்போது இயல்பு நிலைக்கு வரும், வங்கிகளிலும், ஏ.டி.எம்.களிலும் காத்து கிடக்கும் நிலை எப்போது மாறும் என்று மக்கள் ஒவ்வொருவரும் அங்கலாய்த்து கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றுவதற்கான கெடு இன்றுடன் (வெள்ளிக்கிழமை) முடிகிறது. 2017 மார்ச் 31-ந்தேதி வரை ரிசர்வ் வங்கியில் மட்டும் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என்ற வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் செல்லாத 500, 1000 ரூபாய் நோட்டுகள் 10-க்கும் மேலாக வைத்திருந்தால் அபராதம் விதிக்கப்படும் என்றும் ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது.

வங்கிகளில் செல்லாத நோட்டுகளை மாற்ற இன்று கடைசி நாளாக இருந்ததால் ஒரு சிலர் மட்டுமே டெபாசிட் செய்ய வந்தனர். பெரும்பாலானவர்கள் பணம் எடுப்பதற்காகவே காத்து நின்றனர்.

ஆனால் வழக்கம் போல பணத்தட்டுப்பாடு காரணமாக ஒவ்வொரு வங்கிகளிலும் குறைந்த தொகை வழங்கப்பட்டன.

பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு மத்திய அரசு கொடுத்த 50 நாட்கள் கெடு இன்று பிற்பகல் 3.30 மணியுடன் முடிவதால் நாளை முதல் வழக்கமான வங்கி பணிகள் தொடரும் என்று வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

ஜனவரி முதல் வாரத்தில் இருந்து வங்கிகளில் நிலவி வரும் புதிய ரூபாய் நோட்டு தட்டுப்பாடு நீங்கும் என்று கூறப்படுகிறது.

ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருவதால் பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடும் தளர்த்தப்பட வாய்ப்பு உள்ளது.

இதுகுறித்து வேப்பேரி கனரா வங்கி மானேஜர் கணேஷ் கூறியதாவது:-

வங்கிகளுக்கு குறைந்த அளவே இதுவரையில் பணம் வினியோகம் செய்யப்படுவதால் வாடிக்கையாளர்களுக்கு தேவையான அளவு பணம் கொடுக்க முடியவில்லை. இந்த பிரச்சினை அடுத்த மாதம் முதல் வாரத்தில் இருந்து தீரும் என்று எதிர்பார்க்கிறோம். புதிய ரூபாய் நோட்டு கூடுதலாக வினியோகம் செய்வதாக கூறி இருக்கிறார்கள்.

பழைய ரூபாய் நோட்டுகளை பெருமளவில் முன் கூட்டியே வங்கிகளில் டெபாசிட் செய்து விட்டனர். அதனால் இப்போது கூட்டம் வருவதில்லை. ஒரு சிலர் மட்டும்தான் இன்று டெபாசிட் செய்தனர்.

ரொக்க பண பரிமாற்றத்தில் இருந்து டிஜிட்டல் பரிமாற்றத்திற்கு மாற வேண்டும் என்பதற்காக பல்வேறு புதிய முயற்சிகளை வங்கிகள் மேற்கொண்டு வருகின்றன.

கனரா வங்கிகளில் ப்ரீபெய்டு கார்டு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. ஒவ்வொரு வாடிக்கையாளர்களும் கையில் பணத்தை எடுத்து செல்லாமல் ‘ப்ரீபெய்டு’ கார்டு மூலமாக பயன்படுத்தலாம்.

வங்கி கணக்கில் இருந்து பணத்தை அந்த கார்டில் லோடு செய்து பயன்படுத்தும் இந்த வசதி மிகவும் எளிதானது.

அனைத்து தேவைகளுக்கும், பயன்பாட்டு பில்களுக்கும் உபயோகிக்கலாம். பணம் தீர்ந்து விட்டால் ரீ-ஜார்ஜ் (பணம் நிரப்புதல்) செய்து எங்கிருந்தும் பயன்படுத்த முடியும்.

கம்பெனிகள், தொழில் நிறுவனங்கள் நடத்துபவர்கள் எத்தனை கார்டுகள் வேண்டுமானாலும் வாங்கி கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »