செரினா வில்லியம்ஸ்க்கு திருமணம்: ரெட்டிட் நிறுவன இணை இயக்குநரை மணக்கிறார்!

வாஷிங்டன்: அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ்க்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளது. அவர் ரெட்டிட் நிறுவனத்தின் இணை இயக்குநரான அலெக்ஸிஸ் ஒஹானியனை திருமணம் செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அமெரிக்க டென்னிஸ் வீராங்கனையான செரினா வில்லியம்ஸ் டென்னிஸ் உலகின் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வருகிறார். இந்த ஆண்டுக்கான விம்பிள்டன் பட்டத்தை வென்றுள்ள செரினா, இதுவரை 71 ஒற்றையர் பட்டங்களை பெற்றுள்ளார்.

22 கிரான்ட் ஸ்லாம் பட்டங்களையும் செரினா கைப்பற்றியுள்ளார். இதன் மூலம் முன்னாள் வீராங்கனை ஸ்டெபி கிராப்பின் சாதனையை அவர் சமன் செய்துள்ளார்.

இந்நிலையில் செரினா வில்லியம்ஸ் தனது திருமணம் குறித்து தெரிவித்துள்ளார். ரெட்டிட் நிறுவன இணை இயக்குநரான அலெக்ஸிஸ் ஒஹானியனை மணக்கவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக தனது ரெட்டிட் வலைதள பக்கத்தில் செரினா வில்லியம் கவிதை தொகுப்பில் இந்த தகவலை தெரிவித்துள்ளார். ஒஹானியன் மண்டியிட்டு தனது காதலை சொன்னதாகவும் அதற்கு அவர் ‘எஸ்’ சொன்னதாவும் பதிவிட்டுள்ளார்.

இதனை தனது பேஸ்புக் பக்கத்தில் உறுப்படுத்திய ஒஹானியன், ‘அவள் எஸ் சொல்லி விட்டாள்’ என்றும், ‘இந்த பிரபஞ்சத்திலேயே மிகவும் மகிழ்ச்சியான மனிதனாக தன்னை மாற்றிவிட்டதாகவும்’ பதிவிட்டுள்ளார்.

இதன்மூலம் திருமணம் செய்துகொள்ள போவதை இருவரும் உறுதிப்படுத்தியுள்ளனர். ஆனால் திருமண தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

Source: OneIndia