பயிர்கள் கருகி நாசம்.. அதிர்ச்சியில் ஒரே நாளில் 5 விவசாயிகள் மரணம்

திருவாரூர் : வடகிழக்கு பருவ மழை சரியாக பெய்யாதலும், காவிரியில் இருந்து கிடைக்க வேண்டிய தண்ணீர் கிடைக்காததாலும் பயிர்கள் காய்ந்து கருகுகின்றன. இதனைக் கண்ட அதிர்ச்சியில் இன்று ஒரே நாளில் மட்டும் 5 விவசாயிகள் மரணம் அடைந்துள்ளனர்.

காவிரியில் இருந்து கிடைக்க வேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு திறந்து விடாமல் அடாவடி செய்து வருகிறது. உச்ச நீதிமன்றம் தலையிட்டும் கர்நாடக அரசு தண்ணீர் விடுவதில் தொடர்ந்து பிடிவாதத்தை கடைபிடித்து வருகிறது. இதற்கு, மத்திய அரசும் கர்நாடக அரசிற்கு ஆதரவாகவே நடந்து கொள்கிறது. இதுதவிர, வடகிழக்கு பருவமழையும் எதிர் பார்த்த அளவிற்கு பெய்யவில்லை.

இதனால், தொடர்ந்து விவசாயத்திற்கும் குடிநீருக்கும் நீரின்றி விவசாயிகளும் பொதுமக்களும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக காவிரி டெல்டா பகுதிகளில் சுத்தமாக நீர் இல்லாமல் பயிர்கள் காய்ந்துப் போய் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயம் பொய்த்துப் போனால் விவசாயிகள் பலர் தற்கொலை செய்து கொள்வது தொடர் கதையாகிவிட்டது. பயிர்கள் காய்ந்த அதிர்ச்சியில் மாரடைப்பிலும் பல விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்.

திருவாரூர் வெங்கடாசலம்

இந்நிலையில், திருவாரூர் அருகே உள்ள வடுககுடியில் வசித்த 64 வயதான வெங்கடாசலம், நிலத்தில் பயிரிட்ட பயிர்கள் கருகுவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனால் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி கீழே சுருண்டு விழுந்தார். சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

கோவில்பட்டி பவுன்ராஜ்

கோவில்பட்டி பவுன்ராஜ்

இதைப் போன்றே, கோவில்பட்டி அருகே புதூரில் வசித்து வந்தவர் விவசாயி பவுன்ராஜ். 67 வயதான இவர், நீரின்றி பயிர்கள் கருகியதைக் கண்டு அதிர்ச்சியில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். தான் விவசாயம் செய்த நிலத்திலேயே பயிர்களுக்கு அடிக்க வைத்திருந்த மருந்தை எடுத்துக் குடித்து மரணம் அடைந்துள்ளார்.

உசிலம்பட்டி கருப்பத்தேவர்

உசிலம்பட்டி கருப்பத்தேவர்

தண்ணீர் இல்லாமல் விவசாயம் பொய்த்துப் போனதற்கு மேலும் ஒருவர் பலியாகியுள்ளார். உசிலம்பட்டி அருகே பி.கண்ணியம்பட்டியை சேர்ந்த விவசாயி பெரிய கருப்பத்தேவர். இவரும் நீரின்றி பயிர்கள் கருகியதால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

நாகையில் இருவர்

நாகையில் இருவர்

நாகை மாவட்டத்தில் மட்டும் இரண்டு விவசாயிகள் மரணமடைந்துள்ளனர். நாகை மாவட்டம் திருப்புகழுரில் உள்ள விவசாயி கண்ணன் மற்றும் வேளாங்கண்ணியில் வசித்து வந்த 70 வயதான பக்கிரிசாமி ஆகிய இரண்டு பேரும் விவசாயம் பொய்த்த அதிர்ச்சியில் மரணம் அடைந்துள்ளனர்.

50 விவசாயிகள் மரணம்

50 விவசாயிகள் மரணம்

நீரின்றி விவசாயம் பாதிக்கப்பட்டதால் தற்கொலை செய்து கொண்டது, மாரடைப்பால் மரணம் அடைந்தது என இதுவரை சுமார் 50 விவசாயிகள் பலியாகியுள்ளனர். அதில் காவிரி டெல்டா பகுதியைச் சேர்ந்தவர்களே மிக அதிகமாக உயிரிழந்துள்ளனர். நாகை மாவட்டத்தில் மட்டும் 24 பேரும், திருவாரூர் மாவட்டத்தில் 11 பேரும் பலியாகியுள்ளனர்.

ஒரே நாளில் 5 பேர் பலி

ஒரே நாளில் 5 பேர் பலி

இன்று ஒரே நாளில் மட்டும் 5 விவசாயிகள் அடுத்தடுத்து மரணமடைந்துள்ளனர். உயிரிழந்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கவும் காய்ந்து போன பயிர்களுக்கு நஷ்டஈடு வழங்கவும் பல்வேறு விவசாய அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் கோரிக்கை விடுத்து வருகின்றன. என்றாலும் தமிழக அரசு இதுபற்றி இன்னும் வாயைத் திறக்காமல் அமைதி காத்து வருகிறது.

Source: OneIndia