பழைய ரூபாய் நோட்டு விவகாரம்:  547 வங்கிகளில் ஆய்வு செய்ய வருமான வரித்துறை திட்டம்

பழைய ரூபாய் நோட்டு விவகாரம்: 547 வங்கிகளில் ஆய்வு செய்ய வருமான வரித்துறை திட்டம்

புதுடெல்லி:

மத்திய அரசு அறிவித்த ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்ற நடவடிக்கை இன்றுடன் முடிவுக்கு வருகிறது.

இதைத் தொடர்ந்து மத்திய அரசின் நடவடிக்கையால் என்னென்ன பலன்கள் கிடைத்துள்ளன என்ற கேள்வி எழுந்துள்ளது.

முதல் கட்டமாக நாடு முழுவதும் கணக்கில் காட்டப்படாத ரூ.4200 கோடி டெபாசிட் செய்யப்பட்டிருப்பது அதிகாரப்பூர்வமாக தெரிய வந்துள்ளது. நாடு முழுவதும் நடந்த சுமார் 1000 சர்வேக்கள் 200-க்கும் மேற்பட்ட அதிரடி சோதனைகள் மூலம் இது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இது தவிர கருப்புப் பணம் வைத்திருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் பினாமிகள் பெயரில் சொத்துகள் வாங்கி இருப்பது தெரிய வந்துள்ளது. பலர் கருப்புப் பணத்தை தங்கமாக மாற்றி இருப்பதும் உறுதியாகி உள்ளது. அத்தகையவர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே சிலர் பணத்தை பதுக்கி வைத்திருப்பதாக வருமான வரித்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.458 கோடி சிக்கியது.

இதில் ரூ. 105 கோடி பணம் புதிய ரூ.2 ஆயிரம் நோட்டுகளாக இருந்தன. இது தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் பலரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதற்கிடையே நாடு முழுவதும் உள்ள வங்கிக் கிளைகளில் 547 வங்கிகளில் பலர் அதிக பணம் டெபாசிட் செய்து இருப்பது தெரிய வந்துள்ளது. எனவே அந்த 547 வங்கி கிளைகளிலும் விசாரிக்க வருமான வரித்துறை திட்டமிட்டுள்ளது.

இந்த சோதனைகளுக்கு பிறகு கருப்பு பணம் பதுக்கியவர்கள் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Source: Maalaimalar

Author Image
murugan