Go to ...
RSS Feed

பாக் ஜலசந்தி கடலை நீந்தி கடக்க சென்னை மாணவர் தலைமன்னார் பயணம் : இன்று ‘கடல் இறங்குகிறார்’


ராமேஸ்வரம்: தலைமன்னார் தனுஷ்கோடி இடையே பாக் ஜலசந்தி கடலை நீந்தி கடப்பதற்காக, சென்னையை சேர்ந்த பிடெக் மாணவர் நேற்று தலைமன்னார் சென்றார். சென்னை முடிச்சூர் பகுதியை சேர்ந்தவர் ராஜஈஸ்வர பிரபு (24). பி.டெக். படித்து வருகிறார். இவர் சிறு வயது முதல் நீச்சல் பயிற்சி பெற்று கோவா, புதுச்சேரி, கோவளம், புனே கடல் பகுதிகளில் நீந்தி பல்வேறு சாதனைகள் படைத்துள்ளார். தற்போது இலங்கை தலைமன்னாருக்கும், ராமநாதபுரம் மாவட்டம், தனுஷ்கோடிக்கும் இடையில் பாக் ஜலசந்தி கடலை இன்று நீந்தி கடக்கிறார்.

இதனை கண்காணிப்பதற்காக தமிழ்நாடு விளையாட்டுத்துறை ஆணையத்தை சேர்ந்த விஜயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று பகல் 12 மணியளவில் ராமேஸ்வரம் துறைமுகத்தில் இருந்து ஒரு விசைப்படகு மற்றும் ஒரு நாட்டுப்படகில் தேவையான பொருட்களுடன் ராஜஈஸ்வர பிரபு, கண்காணிப்பாளர் விஜயகுமார் உட்பட 16 பேர் கிளம்பி மாலை இலங்கை தலைமன்னார் துறைமுகத்தை சென்றடைந்தனர். இன்று அதிகாலை ஒரு மணிக்கு தலைமன்னாரில் இருந்து கடலில் நீந்தி தனுஷ்கோடி அரிச்சல்முனை வந்தடைகிறார்.

ராஜஈஸ்வர பிரபு கூறுகையில், ‘‘சென்னை நீலாங்கரையில்தான் நீச்சல் பயிற்சி செய்து வருகிறேன். பாக் ஜலசந்தி கடலை நீந்துவதற்கு 4 ஆண்டுகளாக அனுமதி கேட்டு வருகிறேன். இலங்கை அரசு உடனடியாக அனுமதி கொடுத்தது. மத்திய அரசிடம் இருந்து தற்போதுதான் அனுமதி கிடைத்தது. 1994ல் குற்றாலீஸ்வரன் தனது 12வது வயதில் பாக் ஜலசந்தி கடலை 12 மணிநேரத்தில் நீந்தி கடந்தார். நான் 10 மணி நேரத்திற்குள் பாக் ஜலசந்தி கடலை நீந்தி கடக்க முயற்சிக்கிறேன்,’’ என்றார். ஆந்திர மாநிலம், விஜயவாடாவை சேர்ந்த போலீஸ் ஏட்டான துளசி சைதன்யாவும், நாளை அதிகாலை ஒரு மணிக்கு தலைமன்னார் துறைமுகத்திலிருந்து நீந்தி வந்து தனுஷ்கோடி வந்தடைகிறார்.

Source: Dinakaran

English summary
Palk Strait swim across the sea became Chennai student talaimannar lines travel: today he ‘ descend ‘ sea

Pak Strait between Rameshwaram, dhanushkodi talaimannar lines: he swam across the sea, in order to our students from Chennai bideck

Tags: