பாஜகவுக்கு தங்கத் தாம்பாளத்தில் வைத்து வெற்றியை "தூக்கிக்" கொடுக்கும் முலாயம் – அகிலேஷ்!

பாஜகவுக்கு தங்கத் தாம்பாளத்தில் வைத்து வெற்றியை "தூக்கிக்" கொடுக்கும் முலாயம் – அகிலேஷ்!

லக்னோ: உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவை சமாஜ்வாடி கட்சியிலிருந்து 6 வருடத்திற்கு நீக்கி அவருடைய தந்தையும், சமாஜ்வாடிக் கட்சியின் தலைவருமான முலாயம் சிங் யாதவ் உத்தரவிட்டிருப்பதால் கட்சி இரண்டாக உடைந்து சிதறுவது உறுதியாகி விட்டது.

முலாயம் சிங் யாதவின் தம்பியும், உத்தரப் பிரதேச சமாஜ்வாடிக் கட்சியின் தலைவருமான சிவபால் யாதவுக்கும், அகிலேஷ் யாதவுக்கும் இடையே கடும் மோதல் மூண்டது. இதை சரி செய்ய முலாயம் சிங் யாதவ் கடுமையாக முயன்றும் அது கை கூடவில்லை. இந்த நிலையில் அடுத்த ஆண்டு உ.பி சட்டசபைக்குத் தேர்தல் நடைபெறவுள்ளது.

இதற்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியலாக 325 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை சிவபால்யாதவ் வெளியிட்டிருந்தார். ஆனால் அதிரடியாக அகிலேஷ் யாதவ் 235 பேர் கொண்ட போட்டி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். இதையடுத்து முலாயம் சிங் யாதவ் கடும் கோபமடைந்தார்.

கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்கள் பட்டியலுக்குப் போட்டியாக போட்டி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது குறித்து விளக்கம் அளிக்குமாறும், இதற்காக ஏன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று கேட்டும் அகிலேஷுக்கு நோட்டீஸ் அனுப்பினார் முலாயம் சிங் யாதவ்.

ஆனால் இதைக் கண்டு அகிலேஷ்யாதவ் அஞ்சவில்லை. தந்தையிடம் சமரசம் பேசவும் முயலவில்லை. இதையடுத்து இன்று மாலை அகிலேஷ் சிங்யாதவை 6 ஆண்டுகளுக்கு கட்சியை விட்டு நீக்கி உத்தரவிட்டார் முலாயம் சிங் யாதவ். முலாயமின் நடவடிக்கையைத் தொடர்ந்து உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சி உடைவது உறுதியாகி விட்டது.

அடுத்த ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இப்படி அப்பாவும், மகனும் அடித்துக் கொண்டு கட்சியை சீர்குலைத்து விட்டதால் உத்தரப் பிரதேச தேர்தலில் பாஜக, பகுஜன் சமாஜ் கட்சிகளுக்கு நல்ல வாய்ப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நல்ல வெற்றிக்கு முயல்வதை விட்டு விட்டு இப்படி பாஜகவுக்கு வெற்றியை தங்கத் தாம்பாளத்தில் வைத்து சமாஜ்வாடி கட்சி தாரை வார்க்கிறதே என்று முலாயம் சிங் மற்றும் அகிலேஷ் யாதவ் நலம் விரும்பிகள் சமூக வலைதளங்களில் வேதனை தெரிவித்து வருகின்றனர்.

Source: OneIndia

Author Image
murugan