இன்று பொதுச்செயலராக பதவியேற்பு- எம்ஜிஆர், ஜெ. நினைவிடத்தில் சசிகலா கண்ணீர் விட்டு அழுது அஞ்சலி!

சென்னை: அதிமுகவின் பொதுச்செயலராக சசிகலா இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் பொறுப்பேற்க உள்ளார். இதையொட்டி எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா நினைவிடங்களில் சசிகலா நேற்று மாலை அஞ்சலி செலுத்தினார்.

அதிமுகவின் பொதுச்செயலராகிவிட்டார் சசிகலா. அவர் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று பொதுச்செயலர் பொறுப்பை ஏற்கிறார்.

இதற்காக அதிமுக தலைமையகத்தில் ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. அங்குள்ள எம்ஜிஆர் சிலை அருகே மேடை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று எம்ஜிஆர், ஜெயலலிதா நினைவிடங்களில் சசிகலா மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். அவருடன் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை மற்றும் அமைச்சர்களும் வருகை தந்து அஞ்சலி செலுத்தினர்.

அப்போது கண்ணீர்விட்ட சசிகலா பொதுச்செயலராக தேர்ந்தெடுக்கப்பட்ட தீர்மானத்தை ஜெயலலிதா நினைவிடத்தில் வைத்து மண்டியிட்டு வணங்கினார். சில நிமிடங்கள் அப்படியே நின்று கண்ணீர் மல்க வணங்கி பின்னர் ஜெ. நினைவிடத்தை சுற்றி வலம் வந்தார்.

அங்கு வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா படத்தையும் தொட்டு வணங்கினார் சசிகலா. சசிகலா வருகையையொட்டி ஏராளமான அதிமுக தொண்டர்களும் அங்கு குவிந்திருந்தனர்.

சசிகலா வந்தது முதல் அவர் செல்லும் வரை “கருணை” தாயே எங்கள் உயிர் சின்னம்மாவே என ஒரு நபர் நீண்டநேரமாக கூச்சல் போட்டு கொண்டே இருந்தார்.

Source: OneIndia

Facebook Comments