ஆஸ்பத்திரியில் 67 நாட்கள் இருந்தேன், என்னை யாரும் தடுக்கவில்லை: ஜெயலலிதாவின் அண்ணன் மகன் பேட்டி

ஆஸ்பத்திரியில் 67 நாட்கள் இருந்தேன், என்னை யாரும் தடுக்கவில்லை: ஜெயலலிதாவின் அண்ணன் மகன் பேட்டி

சென்னை:

ஜெயலலிதா மரணத்தில் மர்மங்கள் இருப்பதால், இதுகுறித்து விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் 3 பேர் கொண்ட விசாரணை கமிஷன் அமைக்கவேண்டும் என்று அ.தி.மு.க. தொண்டர் ஜோசப் என்பவர் ஐகோர்ட்டில் ஒரு பொதுநல வழக்கை தொடர்ந்தார். இந்த வழக்கு நேற்று முன்தினம் நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், வி.பார்த்திபன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி எஸ்.வைத்தியநாதன், ‘ஜெயலலிதா மரணத்தில் தனிப்பட்ட முறையில் தனக்கும் சந்தேகம் உள்ளது’ என்று கருத்து தெரிவித்தார்.

மேலும், ‘ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும்போது ஜெயலலிதாவை பார்க்க அவரது ரத்த சொந்தங்களை அனுமதிக்கவில்லை. அவர்களும் நீதிமன்றத்தை அணுகவில்லை’ என்றும் நீதிபதி கூறினார்.

நீதிபதியின் இந்த கருத்து, நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘நீதிபதியே இப்படி ஒரு கருத்தை தெரிவித்ததால், ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் பொதுமக்களுக்கு தெரியப்படுத்தவேண்டும்’ என்று அரசியல் கட்சி தலைவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக், நிருபரை தொடர்புகொண்டு கூறியதாவது:-

ஜெயலலிதா அத்தை ஆஸ்பத்திரியில் 75 நாட்கள் சிகிச்சை பெற்றார். அதில் 67 நாட்கள் அப்பல்லோ ஆஸ்பத்திரியில் நான் இருந்தேன். பெரிய அத்தை (ஜெயலலிதா) ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும்போது, அருகில் இருந்து அவரை நன்றாக கவனித்துக்கொண்டவர் சின்ன அத்தை (சசிகலா) தான்.

மருந்து, சாப்பாடு, தண்ணீர் கொடுத்து பெரிய அத்தையை ஒரு குழந்தையை போல சின்ன அத்தை பார்த்துக்கொண்டார். அத்தைக்கு வழங்கப்பட்ட சிகிச்சையில் எந்த ஒரு ஒளிவுமறைவும் இல்லை. வெளிநாட்டு டாக்டர்கள், எய்ம்ஸ் ஆஸ்பத்திரி டாக்டர்கள் எல்லோரும் சிகிச்சை அளித்தனர். அவருக்கு என்ன சிகிச்சை அளிக்கப்பட்டது என்பது குறித்த ஆவணங்கள் எல்லாம் உள்ளது.

ஏற்கனவே அத்தையை இழந்து, சின்ன அத்தையும், நானும் கடுமையான மனவேதனையில் உள்ளோம். இப்போது ஏற்பட்டுள்ள சர்ச்சை, எங்களது மனவேதனையை மேலும் அதிகரிக்க செய்துள்ளது. இப்போதுகூட போயஸ் கார்டனில் அத்தை இல்லாமல், ஒரு நடைபிணம் போலத்தான் சின்ன அத்தை வாழ்ந்து வருகிறார். அவரை பார்த்தாலே அழுகை வந்துவிடுகிறது. அதனால், போயஸ் கார்டனுக்கு போகாமல் உள்ளேன். அவர் பாவம். 30 ஆண்டுகளுக்கும் மேலாக அத்தையுடன் ஒன்றாக வாழ்ந்தவர். அத்தையின் இழப்பு அவருக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு.

நம் குடும்பத்தில் இப்படி ஒருவரை இழந்து இருக்கும்போது, இப்படி ஒரு சர்ச்சையை ஏற்படுத்தினால் எப்படி இருக்கும் என்பதை சிந்தித்து பார்க்கவேண்டும். ஜெயலலிதாவின் அண்ணன் மகன் நான் தான். நான் தான் அவரது ரத்த சொந்தம். ரத்த சொந்தமாகிய நான் அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு சென்றேன். எனக்கு யாரும் தடைவிதிக்கவில்லையே?. என் அத்தை சாவில் எந்த மர்மமும் இல்லை. சர்ச்சையும் இல்லை.

அத்தையும் போய்விட்டார். அவர் கட்சியில் வகித்த பதவியை, தகுதியான நபரான சின்ன அத்தையிடம் வழங்கப்பட்டுவிட்டது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், அ.தி.மு.க. தொண்டர் என்று கூறி, வழக்கு தொடர்வதும், அந்த வழக்கு விசாரணையில் தெரிவிக்கப்படும் கருத்துகளும், எங்களுக்கு மேலும் மேலும் வேதனையைத்தான் தருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Source: Maalaimalar

Author Image
murugan