பீகார் சிறையில் இருந்து 5 கைதிகள் தப்பி ஓட்டம்

புக்சர்:

பீகார் தலைநகர் பாட்னா அருகே புக்சர் மத்திய சிறைச்சாலை உள்ளது.

இந்த சிறையில் இருந்து நள்ளிரவு 5 கைதிகள் தப்பி ஓடிவிட்டனர். இதில் 4 பேர் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்கள்.

பிரஜித்சிங், சிர்காரி ராய், சோனுபாண்டே, உபேந்திரா ஷா ஆகிய ஆயுள் தண்டனை கைதிகளும், 10 ஆண்டு ஜெயில் தண்டனை அறிவிக்கப்பட்ட சோனு சிங்கும் சிறையில் இருந்து தப்பி உள்ளனர்.

5 கைதிகளும் சுவற்றில் துளை போட்டு தப்பி சென்றது தெரியவந்தது. அந்த இடத்தில் இரும்பு கம்பி, பைப், மற்றும் வேட்டி ஆகிய பொருட்கள் கிடந்தன. நள்ளிரவு 12 மணியில் இருந்து அதிகாலை 3 மணி வரை அவர்கள் சுவரில் துளைபோட்டு தப்பி உள்ளனர்.

சிறையில் இருந்து கைதிகள் தப்பி ஓடிய சம்பவம் பீகாரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாதுகாப்பு குறைபாடு காரணமாகவும் அங்குள்ளவர்கள் உதவியதன் காரணமாகவும் கைதிகள் தப்பி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

கைதிகள் தப்பியது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சம்மந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிறை துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தப்பி ஓடிய கைதிகளை தேடும் பணியில் போலீசார் முடுக்கி விடப்பட்டுள்ளனர்.

Source: Maalaimalar

Facebook Comments