டெல்லி புதிய துணைநிலை ஆளுநர் அனில் பைஜால் பதவியேற்றார்

புதுடெல்லி:

டெல்லி மாநிலத்தின் துணை நிலை ஆளுநராக கடந்த 2013–ம் ஆண்டு முதல் பதவி வகித்து வந்த நஜீப் ஜங், கடந்த சில தினங்களுக்கு முன் தனது பதவியை ராஜினாமா செய்வதாக திடீரென அறிவித்தார். இது தொடர்பான கடிதத்தை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கும் அவர் அனுப்பி வைத்தார். நஜீப் ஜங்கின் ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஏற்றுக்கொண்டார்.

இந்நிலையில், வாஜ்பாய் ஆட்சியின் போது மத்திய உள்துறை செயலாளராக பொறுப்பு வகித்த அனில் பைஜால்(70) டெல்லி துணை நிலை ஆளுநராக நியமனம் செய்யப்பட்டார். அனில் பைஜாலின் நியமனத்திற்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார்.

இந்நிலையில், டெல்லி துணைநிலை ஆளுநராக அனில் பைஜால் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஜி.ரோகிணி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

1969 பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியான அனில் பைஜால் டெல்லி வளர்ச்சி ஆணையத்தின் துணைத்தலைவர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். கடந்த 2006 ஆம் ஆண்டு பணி ஓய்வு பெற்றார்.

Source: Maalaimalar

Facebook Comments