குடும்ப அட்டைகளில் நாளை முதல் உள்தாள் இணைக்கப்படுகிறது

குடும்ப அட்டைகளில் நாளை முதல் உள்தாள் இணைக்கப்படுகிறது

சென்னை:

தமிழகத்தில் ரூ.2 கோடி குடும்ப அட்டைகள் உள்ளன. பொது வினியோகத் திட்டத்தின் கீழ் குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா அரிசி மற்றும் சர்க்கரை, பருப்பு வகைகள், மண்ணெண்ணெய், சமையல் எண்ணெண்ணெய் போன்றவை குறைந்த விலையில் வழங்கப்படுகின்றன.

தற்போது நடைமுறையில் உள்ள ரே‌ஷன் கார்டுகளின் ஆயுட்காலம் இன்றுடன் முடிகிறது. புதிய ரே‌ஷன் கார்டு ஸ்மார்ட் கார்டு அளவில் வழங்க திட்டமிடப்பட்டு பணிகள் நடைப்பெற்று வருகின்றன.

ஸ்மார்ட் கார்டு வழங்குவதற்கு குடும்ப அட்டை தாரர்களின் முழு விவரங்கள் மற்றும் ஆதார் எண், செல்போன் எண் போன்றவை ரே‌ஷன் கடைகளில் உள்ள எலக்ட்ரானிக் மெஷின் மூலம் பதிவு செய்யப்படுகிறது.

புழக்கத்தில் உள்ள 2 கோடி குடும்ப அட்டையில் ஒரு கோடி பேர் மட்டுமே இதுவரையில் ஆதார் எண் விவரங்களை பதிவு செய்துள்ளனர். 50 சதவீதம் பேர் ஆதார் விவரங்களை கொடுக்காததால் ஸ்மார்ட் கார்டு வழங்கும் திட்டம் தள்ளிப்போகிறது.

மீதமுள்ளவர்களும் பதிவு செய்த பிறகுதான் ஸ்மார்ட் கார்டு வழங்க முடியும் என்ற நிலை ஏற்பட்டதால் மேலும் ஒரு வருடத்திற்கு தற்போதைய குடும்ப அட்டைகளை பயன்படுத்துவதற்கு கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து ரே‌ஷன் கார்டுகளில் ஜனவரி மாதம் முதல் பொருட்கள் வாங்குவதற்கு ஏதுவாக உள்தாள் இணைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி ரே‌ஷன் கார்டுகளில் உள்தாள் இணைக்கும் பணி நாளை (1-ந்தேதி) முதல் தமிழகம் முழுவதும் தொடங்குகிறது. தமிழகம் முழுவதும் ரே‌ஷன் கடைகளிலும் உள்தாள்கள் இணைக்கப்படுகிறது.

ரே‌ஷன் கார்டுகளில் 2017-ம் ஆண்டிற்கான உள்தாள் இணைக்கப்பட்டு அதில் அரசு முத்திரை குத்தப்படும். உள்தாள் ஒட்டியதற்காக ஒவ்வொரு குடும்ப அட்டைதாரரிடமும் தனி பதிவேட்டில் கையெழுத்து வாங்கப்படும்.

ஆதார் எண் இணைந்தவர்கள் மட்டுமின்றி பதிவு செய்யாதவர்களும் உள்தாளை இணைத்து கொள்ளலாம். ஆதார் எண்களை பதிவு செய்யாதவர்களை உடனடியாக பதிவு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்படும் என்று உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதுகுறித்து சிவில் சப்ளை உயர் அதிகாரி ஒருவர்மேலும் கூறியதாவது:-

ரே‌ஷன் கார்டுகளில் உள்தாள் இணைக்கும் பணி நாளை முதல் தொடங்குகிறது. குடும்ப அட்டைதாரர்கள் நெரிசல் இல்லாமல் ஜனவரி மாதம் முழுவதும் இணைத்து கொள்ளலாம்.

ஒரு ரே‌ஷன்கடையில் நாள் ஒன்றுக்கு 100 குடும்ப அட்டைகளுக்கு உள்தாள் இணைக்கப்பட வேண்டும் என்று ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆதார் எண் 50 சதவீதம் பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 40 சதவீதம் பேர் இன்னும் பதிவு செய்யாமல் இருக்கிறார்கள். வடசென்னையில் 61 சதவீதமும், தென் சென்னையில் 57 சதவீத பேரும் ஆதார் பதிவு செய்யவில்லை.

பொங்கல் இலவச வேட்டி-சேலை, பொங்கல் பரிசு போன்றவை ஜனவரி முதல் வாரத்தில் வழங்குவதற்குகான ஏற்பாடுகள் நடக்கின்றன.

சென்னையில் 1800 ரே‌ஷன் கடைகள் உள்ளன. இவற்றில் 21 லட்சம் குடும்ப அட்டைகள் இருக்கின்றன. இதனால் 23 லட்சத்து 50 ஆயிரம் உள்தாள்கள் அச்சடித்து கடைகளுக்கு வினியோகிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

Source: Maalaimalar

Author Image
murugan