அகிலேஷ் யாதவ் அரசு கவிழுமா? – சமாஜ்வாடி குடும்பச் சண்டை உச்சக்கட்டம்

அகிலேஷ் யாதவ் அரசு கவிழுமா? – சமாஜ்வாடி குடும்பச் சண்டை உச்சக்கட்டம்

லக்னோ:

உத்தரபிரதேசத்தில் ஆளும் சமாஜ்வாடி கட்சியில் கடும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இன்னும் சில மாதங்களில் சட்டசபை தேர்தலை சந்திக்க உள்ள நிலையில், சமாஜ்வாடியில் அதிகாரத்தை கைப்பற்றுவதில் அக்கட்சியின் நிறுவனரான முலாயம் சிங் யாதவுக்கும், அவரது மகனும், முதல்-மந்திரியுமான அகிலேஷ் யாதவுக்கும் மோதல் உருவானது.

முலாயம்சிங்குக்கு ஆதரவாக அவரது தம்பியும், மாநில சமாஜ்வாடி தலைவருமான சிவபால் யாதவ் வலதுகரமாக இருந்து செயல்பட்டு வருகிறார். அகிலேஷ் யாதவுக்கு ஆதரவாக முலாயம் சிங்கின் சித்தப்பா மகனும் சமாஜ்வாடி கட்சி பொதுச் செயலாளருமான ராம் கோபால் யாதவ் இருக்கிறார். இதனால் சமாஜ்வாடியில் மூத்த தலைவர்கள் இரு கோஷ்டிகளாகப் பிரிந்துள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளாக இவர்களுக்கிடையே நீருபூத்த நெருப்பாக இருந்து வந்த மோதல் முலாயம்சிங் யாதவ் 325 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டதும் பூதாகரமாக வெடித்தது. அந்த வேட்பாளர் பட்டியலை ஏற்காத அகிலேஷ் யாதவ் நேற்று முன்தினம் இரவு 235 தொகுதிகளுக்கான போட்டி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார்.

இதனால் கடும் அதிருப்தி அடைந்த முலாயம்சிங் யாதவ் நேற்றிரவு முதல்-மந்திரி அகிலேஷ் யாதவை சமாஜ் வாடி கட்சியில் இருந்து 6 ஆண்டுகளுக்கு நீக்குவதாக அறிவித்தார். பொதுச் செயலாளர் ராம் கோபால் யாதவும் கட்சியில் இருந்து நீக்கி வைக்கப்பட்டுள்ளார்.

உத்தரபிரதேசத்துக்கு புதிய முதல்-மந்திரி தேர்ந்து எடுக்கப்படுவார் என்று முலாயம்சிங் யாதவ் அறிவித்துள்ளார். அவரது இந்த அதிரடி நடவடிக்கை கட்சியின் மூத்த தலைவர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அகிலேஷ் மீதான நடவடிக்கையை திரும்பப் பெறுமாறு அவர்கள் சமரச முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் முலாயம்சிங் தனது முடிவில் உறுதியாக உள்ளார்.

இதன் காரணமாக சமாஜ் வாடி கட்சியில் உச்சக்கட்ட நெருக்கடியான நிலை ஏற்பட்டுள்ளது. முலாயம்சிங்கின் நடவடிக்கையை ஏற்க மறுத்துள்ள அகிலேசும், ராம்கோபால் யாதவும் தாங்கள் தங்கள் பதவிகளில் நீடிப்பதாக கூறியுள்ளனர். அடுத்தக்கட்ட நடவடிக்கையாக அவர்கள் ஆதரவாளர்களை ஒன்று திரட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இதனால் உத்தரபிரதேசத்தில் பரபரப்பான அரசியல் சூழ்நிலை காணப்படுகிறது.

கட்சியில் தனக்கு இருக்கும் செல்வாக்கை காட்டுவதற்காக சமாஜ்வாடி எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டத்துக்கு அகிலேஷ் அழைப்பு விடுத்தார். இதை அறிந்ததும் சுமார் 100 சமாஜ்வாடி எம்.எல்.ஏ.க்கள் நேற்றிரவே அகிலேஷ் வீட்டுக்கு சென்று தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர். இன்று காலை ஆயிரக்கணக்கான சமாஜ்வாடி தொண்டர்கள் லக்னோவில் குவிந்தனர்.

அகிலேசின் இந்த நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் முலாயம் சிங் யாதவும் போட்டி கூட்டத்தை கூட்டி உள்ளார். அதோடு அகிலேஷ் நடத்தும் கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள், எம்.எல்.ஏ.க்கள் யாரும் கலந்து கொள்ளக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளார்.

முலாயம்சிங்கும், அகிலேசும் போட்டி கூட்டங்கள் நடத்துவதால் சமாஜ்வாடி கட்சி இரண்டாக பிளவுபடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சமாஜ்வாடியில் ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடி காரணமாக உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடி ஆட்சி கவிழும் என்ற பரபரப்பான சூழ்நிலை உருவாகியுள்ளது. சமாஜ்வாடி எம்.எல்.ஏ.க்கள் இரு கோஷ்டியாக பிரியும் பட்சத்தில் அகிலேஷ் யாதவுக்கு பெரும்பான்மை பலம் இல்லாமல் போய் விடும். அதுபோல முலாயம்சிங் யாதவ் தேர்வு செய்யும் புதிய முதல்வருக்கும் பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கிடைக்காது.

இத்தகைய சூழ்நிலையில் கவர்னர் ராம்நாயக் அதிரடி நடவடிக்கையை எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சட்டசபையில் பெரும்பான்மை பலத்தை நிரூபித்து காட்டும்படி அவர் முதல்-மந்திரி அகிலேஷ் யாதவுக்கு உத்தரவிடக் கூடும். அப்படி அவர் உத்தரவிட்டால் உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சியின் ஆட்சி முடிவுக்கு வந்து விடும்.

இதற்கிடையே சமாஜ் வாடி கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ள காரணத்தால் அகிலேஷ் யாதவ் முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று பா.ஜ.க. வலியுறுத்தி வருகிறது. அகிலேஷ் ஆட்சிக் கவிழும் பட்சத்தில் உத்தரபிரதேசத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று பா.ஜ.க. தீவிரமாகியுள்ளது.

ஆனால் முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்யப் போவதில்லை என்று அகிலேஷ் கூறியுள்ளார். முதல்-மந்திரியாக நீடிப்பது பற்றி அவர் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் அகிலேஷ் யாதவுக்கு மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி ஆதரவு தெரிவித்துள்ளார். நேற்றிரவு அவர் அகிலேசுடன் போனில் தொடர்பு கொண்டு பேசினார்.

அப்போது அவர் அகிலேசிடம், “இது உங்களுக்கு சோதனையான காலக்கட்டம். துணிச்சலுடன் இருங்கள். மன வலிமையுடன் செயல்படுங்கள்” என்று அறிவுரை கூறினார். நீங்கள் என் சகோதரர் மாதிரி. எனவே என் ஆதரவு உங்களுக்கு எப்போதும் உண்டு என்றும் அகிலேசிடம் மம்தா கூறினார்.

மம்தா பானர்ஜி போன்று சமாஜ்வாடி மூத்த தலைவர்களில் பலர் போன் மூலம் அகிலேஷ் யாதவுக்கு ஆதரவு தெரிவித்தனர். இதனால் அகிலேஷ் பரபரப்பான அடுத்தக் கட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்.

முலாயம் – அகிலேஷ் இடையே ஏற்பட்டுள்ள குடும்ப சண்டையை தற்போது உன்னிப்பாக கவனித்து வருவதாக கவர்னர் ராம்நாயக் கூறியுள்ளார். சமாஜ்வாடியில் குழப்பம் அதிகரித்தால் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக கவர்னர் கூறியுள்ளார். எனவே கவர்னர் என்ன செய்யப் போகிறார் என்ற கேள்விக்குறியும், எதிர்பார்ப்பும் நாடெங்கும் நிலவுகிறது.

உத்தரபிரதேச சட்டசபை தேர்தல் தேதியை ஜனவரி 3-ந்தேதி அறிவிக்க தலைமை தேர்தல் கமி‌ஷன் தயாராகி வருவதாக கூறப்படுகிறது. எனவே அதற்கு முன்பு கவர்னர் ராம்நாயக் நடவடிக்கை எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே கட்சியின் தலைவர் முலாயம்சிங் இன்று கட்சி தலைமை அலுவலகத்தில் அவசர கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தார். அவர் அறிவித்த வேட்பாளர்கள், அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் மற்றும் முக்கிய தலைவர்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

இதேபோல் அகிலேஷ் ஏற்பாடு செய்திருந்த ஆலோசனைக்கூட்டத்திலும் ஏராளமான எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள் மற்றும் அவர் அறிவித்த வேட்பாளர்கள் கலந்துகொண்டனர். இதில், அகிலேஷ் யாதவுக்கு அதிகபட்ச எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தர்மசங்கடமான சூழ்நிலையில், நிலைமை சமாளித்து ஆட்சியை தக்க வைப்பது குறித்து முலாயம் சிங் ஆலோசனை நடத்தி வருகிறார்.

இதுஒருபுறமிருக்க முலாயம் சிங், அகிலேஷ் இருவரையும் சமாதானம் செய்யும் முயற்சியில் ஆசம் கான் இறங்கினார். இதன் பயனாக ஆசம் கானுடன், அகிலேஷ் யாதவ் முலாயம் சிங் வீட்டிற்கு சென்றார். அப்போது இருவரும் கட்சியில் ஏற்பட்டுள்ள குழப்பத்திற்கு முடிவு கட்டுவது குறித்து ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.

Source: Maalaimalar

Author Image
murugan