அருணாச்சல பிரதேச அரசியலில் அதிரடி திருப்பம்: ஆளுங்கட்சியின் 33 எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வில் இணைந்தனர்

புதுடெல்லி:

அருணாச்சல பிரதேச மாநில அரசியலில் கடந்த செப்டம்பர் மாதம் அதிரடி திருப்பம் ஏற்பட்டது. காங்கிரஸ் சார்பில் முதல்வராக பொறுப்பேற்றிருந்த பேமா காண்டு, 42 எம்.எல்.ஏ.க்களுடன் அக்கட்சியில் இருந்து விலகி, பா.ஜ.க. தலைமையிலான வடகிழக்கு ஜனநாயக முன்னணியில் அங்கம் வகிக்கும் அருணாச்சல் மக்கள் கட்சியில் இணைந்தார். தொடர்ந்து முதல்வர் பொறுப்பையும் வகித்து வருகிறார்.

மொத்தம் 60 உறுப்பினர்கள் கொண்ட அருணாச்சல பிரதேச சட்டப்பேரவையில் 43 எம்.எல்.ஏ.க்களுடன் அருணாச்சல் மக்கள் கட்சி பெரும்பான்மை பலத்துடன் உள்ளது.

இந்நிலையில், பேமா காண்டு தலைமையிலான அரசு, பா.ஜ.க.வுக்கு சாதமாக நடந்துகொள்வதாக குற்றம்சாட்டப்பட்டது. பா.ஜ.க.வில் தனது கட்சியை இணைக்க முயன்றதாகவும் கூறப்பட்டது.

இதன் காரணமாக, முதல்வர் பேமா காண்டு, துணை முதல்வர் மற்றும் 5 எம்.எல்.ஏ.க்களை கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்குவதாக அருணாச்சல் மக்கள் கட்சி சமீபத்தில் அறிவித்தது. அத்துடன் தகம் பாரியோவை புதிய முதல்வராக்கவும் முடிவு செய்தது.

இன்று மேலும் 4 எம்.எல்.ஏ.க்களை சஸ்பெண்ட் செய்த நிலையில், இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அருணாச்சல் மக்கள் கட்சியைச் சேர்ந்த 33 எம்.எல்.ஏ.க்கள் இன்று அதிரடியாக பா.ஜ.க.வில் இணைந்தனர். ஆளும் அருணாச்சல் மக்கள் கட்சியில் தற்போது 10 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே உள்ளனர். இதனால் அருணாச்சல பிரதேச அரசியலில் மீண்டும் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது.

Source: Maalaimalar