அரசியலுக்கு வாங்க.. தீபா வீட்டை முற்றுகையிட்ட அதிமுக தொண்டர்கள்! நல்ல முடிவை அறிவிப்பதாக தீபா உறுதி

சென்னை: விரைவில் நல்ல முடிவை அறிவிப்பேன் என்று, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ. தீபா தெரிவித்தார்.

அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா இன்று பொறுப்பேற்றார். இதையடுத்து அவருக்கு எதிரான அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள், ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபாவை அரசியலுக்கு வருமாறு, அழைக்க அவரது தி.நகர் வீட்டை முற்றுகையிட்டனர்.

விழுப்புரம், திருவள்ளூர், பூவிருந்தவல்லியில் இருந்து ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள் வந்து, தீபாவை அரசியலுக்கு வருமாறு அழைப்புவிடுத்து கோஷமிட்டனர். தங்களால் இங்கு நடப்பதை பார்த்துக் கொண்டு தாங்க முடியவில்லை என்றும், ஜெயலலிதாவின் வாரிசாக அரசியலில் களமாட வேண்டும் என்று தீபாவிடம் அவர்கள் கோரிக்கைவிடுத்தனர்.

அப்போது வெளியே வந்த தீபா, அதிமுகவினர் அமைதி காக்க வேண்டும் என கோரிக்கைவிடுத்தார். மற்றவர்களுடன் தக்க ஆலோசனை செய்துவிட்டு, விரைவில் நல்ல முடிவை அறிவிப்பேன் என கூறி தொண்டர்களை அனுப்பி வைத்தார்.

Source: OneIndia

Facebook Comments