Go to ...
RSS Feed

போலி சான்றிதழ்களை காட்டி 6 ஆண்டுகளாக பேரிடர் மேலாண்மை பயிற்சி அளித்த ஆறுமுகம்


கோவை: கோவையில் கல்லூரி ஒன்றில் பேரிடர் மேலாண்மை பயிற்சியின் போது இரண்டாவது மாடியில் இருந்து பயிற்சியாளர் தள்ளிவிட்டதில் கோவை கல்லூரி மாணவி லோகேஸ்வரி தலையில் அடிபட்டு பலியானார். இந்நிலையில் பயிற்சியாளர் ஆறுமுகத்தை இன்று காலை போலீசார் கைது செய்தனர். அஜாக்கிரதையாக செயல்படுதல் என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கைது செய்யப்பட்ட ஆறுமுகத்திடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பேரிடர் மேலாண்மை பயிற்சியாளர் என்ற சான்று போலி என கண்டறியப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது பற்றி செய்தியாளர்களிடம் போசிய கோவை எஸ்.பி, தற்போது கைது செய்யப்பட்டுள்ள ஆறுமுகம் தமிழகத்தில் கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக மாணவ, மாணவிகளுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சியை அளித்து வந்துள்ளதாக குறிப்பிட்டார். அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து விசாரித்த போது அவை போலி என்பது தெரியவந்ததாகவும் கூறினார்.

தான் பேரிடர் மேலாண்மையில் பணிபுரிவது போல போலி சான்றிதழ்களை காட்டி ஆறுமுகம் மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி அளித்து வந்துள்ளதாகவும் காவல்துறை அதிகாரி கூறினார். இதனிடையே நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய பேரிடர் மேலாண்மை துறை இயக்குனர் ராஜேந்திர ரத்னு, கல்வி நிலையங்களில் பேரிடர் மேலாண்மை குறித்து பயிற்சி அளிப்பதை ஒழுங்குப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அங்கீகரிக்கப்படாத பயிற்சியாளர்கள் கண்டறியப்பட்டால் கடும் சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார். ஆறுமுகத்திடம் போலி சான்றிதழ்கள் கண்டறியப்பட்டுள்ளதை அடுத்து, இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாகவும் ராஜேந்திர ரத்னு கூறியுள்ளார்.

Source: Dinakaran

Tags: