Go to ...
RSS Feed

எட்டு வழிச்சாலைக்கு நிலம் அளவீடு செய்யும் பணி விவசாய சங்க பிரதிநிதிகள் கைது


காஞ்சிபுரம்: சென்னை-சேலம் பசுமை வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்த காஞ்சிபுரம் விவசாய சங்க பிரதிநிதிகள் கைது செய்யப்பட்டனர்.
சேலம் – சென்னை இடையே 8 வழிச்சாலை அமைக்க, காஞ்சிபுரம் மாவட்டத்தில் 59.1 கி.மீ தூரம் நிலம் எடுக்க விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 4ம் நாளாக நேற்று 2 குழுக்களாக அளவீடு செய்யும் பணியை அதிகாரிகள் செய்தனர். மணல்மேடு பகுதியில் நிலம் அளவீடு செய்யும்போது, பல்வேறு விவசாய சங்க நிர்வாகிகள் சாலை அமைப்பது குறித்து, அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டனர். உடனே போலீசார் அவர்களை கைது செய்தனர்.நிலம் அளவீடு பணியின்போது, வருவாய்த்துறை, மின்சாரத்துறை, நெடுஞ்சாலைத்துறை, கல் புதைக்கும் பணியாளர்கள் அனைவரையும் ஏடிஎஸ்பி சந்திரசேகரன் அவமரியாதையாக ஒருமையில் பேசி வந்துள்ளார்.

விவசாயிகள், விவசாயிகள் சங்க நிர்வாகிகளையும் ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது. மேலும் பத்திரிகையாளர்கள், புகைப்படக்காரர்கள் யாரிடமும், பெயரை சொல்லக்கூடாது, அழக்கூடாது என மிரட்டியுள்ளார்.இந்திய யூனியன் முஸ்லிம்  லீக் மாவட்ட தலைவர் அல்லாபக்சத்: நான் தொழுகைக்கு செல்வதற்காக வந்தபோது, சாலை அளவிடும் பணியை பார்த்து நின்றேன். அங்கிருந்த விவசாயிகள் சங்க நிர்வாகிகளுக்கு வணக்கம் சொன்னேன். அந்த ஒரே காரணத்துக்காக என்னையும் சேர்த்து கைது செய்துள்ளனர் என்றார். நிலத்தில் உருண்டு புரண்ட தம்பதி:  உத்திரமேரூர்  அருகே விசூர் கிராமத்தில் முத்து – ராணி தம்பதிக்கு சொந்தமான ஒன்றேகால்  ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலம் மற்றும் கிணறு ஆகியவற்றை அளவீடு செய்தனர்.இதுகுறித்து தம்பதியர் கூறுகையில்,  ‘சில மாதங்களுக்கு முன், இந்த நிலத்தை எனது மகன் வாங்கினான்.  அதில் ஒருபோகம் கூட விதைக்கவில்லை. இப்போது இந்த நிலத்தையும் அபகரிக்கிறார்கள். விவசாயிகளை  வாழ வைப்பார்களா அல்லது சாகடிப்பார்களா. நிலத்தை அளவிட உள்ள தகவல் தெரிந்ததும் எனது மகன் உடல் நிலை  பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சேர்த்துள்ளோம்’  என்றனர்.

எங்களை துப்பாக்கியால் சுட்டு கொல்லுங்கள்: மானாம்பதி கிராமத்தில் முருகேசன் – வனிதா தம்பதிக்கு சொந்தமாக வீடு, அதன் பின்புறம் நான்கரை  ஏக்கர் நிலம் கிணற்றுடன் உள்ளது. இதில் வீடு மற்றும் 4 ஏக்கர் நிலம் அளவீடு செய்யப்பட்டது. அதை பார்த்து அவர்கள் கதறி அழுதனர். அவர்களை, அதிகாரிகள் சமாதானம் செய்ய  முயன்றபோது, இங்குள்ள பயிர்களை குழந்தையை போல பாதுகாத்து வளர்க்கிறோம்.  எங்கள் நிலத்தில் அத்துமீறி நுழைந்து, கல் நட்டு வைக்கிறீர்கள்.  வீட்டையும்  அபகரித்துவிட்டால், இங்குள்ள பொருட்களையும் குழந்தைகளையும், வளர்க்கும்  மாடு, ஆடுகளை எங்கே கொண்டு செல்வது. போலீசாரை வைத்து மிரட்டி,  எங்கள் நிலத்தை அபகரிக்கிறீர்கள். இதைவிட, போலீசாரிடம் உள்ள  துப்பாக்கியால், எல்லோரையும் சுட்டு கொன்றுவிடுங்கள் என கூறி கதறினர்.

Source: Dinakaran

Tags: