Go to ...
RSS Feed

பிசியோதெரபிஸ்ட் கொலையாளி, பத்தாம் வகுப்பில் மாநிலத்திலேயே 2வது இடம் பிடித்த மாணவி.. திடுக் தகவல்


For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

திருச்சி: அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த பிஸியோதெரபிஸ்ட்டை திருச்சியில் இளம் பெண் ஒருவர் கூலிப்படை வைத்து கொலை செய்த சம்பவம் காவல் துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த பெண் பத்தாம் வகுப்பு தேர்வில் மாநிலத்திலேயே 2வது இடம் பிடித்து அசத்திய ஈஸ்வரியாகும்.

திருச்சி திருவாணைக்காவலிருந்து கல்லனை செல்லும் வழியில், காவிரி ஆறு வடகரையோரம் புற்றுக்கோயில் பகுதியில் கடந்த ஜூலை 11 ஆம் தேதி கொலை செய்யப்பட்டு காயங்களுடன் ஆண் சடலம் ஒன்று கிடந்தது. இந்த கொலை குறித்து ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றுவந்தது.

இந்த கொலை தொடர்பாக திருச்சி காவல் துறை கமிஷனர் உத்தரவுப்படி தனிப்படை அமைக்கப்பட்டு கொலையான நபரைப் பற்றி விசாரித்ததில், அரியலூர் மாவட்டம், பொன்பரப்பி அண்ணா நகரைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் விஜயகுமார் (37) என்பது தெரியவந்தது. இவர் பிஸியோதெரபி படித்துவிட்டு சென்னை நுங்கம்பாக்கத்தில் டாக்டராக வேலை பார்த்து வந்துள்ளார்.

மாணவியுடன் பழக்கம்

விஜயகுமார் ஜூலை 8 ஆம் தேதி தனது சொந்த ஊரான பொன்பரப்பியிலிருந்து சென்றவர் வீடு திரும்பவில்லை என்று பொன்பரப்பி காவல் நிலையத்தில் அவரின் மனைவி கற்பகாம்பாள் அளித்த புகாரின் பேரில் காணவில்லை என்று வழக்கு பதிவு செய்துள்ளனர். அடுத்த கட்டமாக விஜயகுமாரை யார் கொலை செய்திருப்பார்கள் என்று தனிப்படை காவல் துறையினர் விசாரணை நடத்தியதில், கொலை செய்யப்பட்ட விஜயகுமார் என்பவர் திருச்சி உறையூரைச் சேர்ந்த சுப்பிரமணி செட்டியார் மகள் ஈஸ்வரி என்பவருடன் கடந்த 2 வருடமாக பழகி வந்துள்ளது தெரியவந்தது. ஈஸ்வரி சென்னையில் சிஏ படித்து வந்ததுள்ளார். ஒருமுறை முன்பதிவு செய்யாத தொடர் வண்டியில் இருவரும் சென்னைக்கு் ஒன்றாக பயணித்தபோது பேச்சு தொடங்கி தொலைபேசி எண்ணை பரிமாறும் அளவுக்கு சென்றுள்ளது.

படுகொலை

இதன்பிறகு, விஜயகுமாருடன் ஈஸ்வரிக்கு சென்னையில் அடிக்கடி சந்திப்பு ஏற்பட்டுள்ளது. திருமணமாகாத ஈஸ்வரிக்கும் திருமணமாகி 2 குழந்தைகள் பெற்ற விஜயகுமாருக்கும் நட்பு அதிகரித்துள்ளது. இதனிடையே, கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபம் அடைந்த ஈஸ்வரி தனக்கு தெரிந்த, திருச்சி காந்தி மார்க்கெட்டைச் சேர்ந்த மாரிமுத்து (33), சிந்தாமணியைச் சேர்ந்த கணேசன்(23), திருச்சி வெனிஸ் தெருவைச் சேர்ந்த குமார்(28) ஆகியோர்களை கூலிப்படையாக வைத்து விஜயகுமாரைக் கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியுள்ளார். இவர்களுக்கு ஈஸ்வரி கொலை செய்வதற்கு முன்பணமாக ரூபாய் 55 ஆயிரம் பணமும் கொடுத்துள்ளார்.

ஈஸ்வரி ஏற்பாடு

இதைத்தொடர்ந்து, கடந்த ஜுலை 8 ஆம் தேதி அன்று ஈஸ்வரி விஜயகுமாருடன் சென்னையிலிருந்து தொடர் வண்டிமூலம் திருச்சி வந்துள்ளார். பின்னர் விஜயகுமார் தனது சொந்த ஊர் பொன்பரப்பிக்குச் சென்றுள்ளார். பின்னர், ஈஸ்வரி அழைத்ததன் பேரில் திருச்சி வந்த விஜயகுமாரை திருவாணைக்காவல் கல்லனை மெயின் ரோடு, காவிரி ஆறு வடகரையோரம் புற்றுகோயில் இறக்கத்தில் மணலுக்கு அழைத்துச் சென்றுள்ளார். பின்னர், அங்கே ஈஸ்வரி மாரிமுத்து, கணேசன், குமார் ஆகியோர் சேர்ந்து விஜயகுமாரை கொலை செய்துள்ளனர். பின்னர், விஜயகுமார் அணிந்து இருந்த செயின் மோதிரம் நகையை எடுத்துக்கொண்டு சென்றது காவல் துறையினர் விசாரணையில் தெரியவந்தது.

பலாத்காரம், காணொளி

ஈஸ்வரிதான் இந்த கொலை பின்னணியில் இருப்பது தெரியவந்ததும், போலீசார் அவரை தேடிவந்தனர். எனவே அவர், ஸ்ரீரங்கம் காவல் நிலையத்திற்கே வந்து கொலை சம்பவத்தை ஒப்புக்கொண்டார். அவர் தனது வாக்குமூலத்தில், ஒருநாள் உடம்பு சரியில்லை என கூறினேன். அப்போது சிகிச்சையளிப்பதாக என்னை வரக்கூறிய விஜயகுமார், குளிர்பானத்தில் மயக்க மருந்தை கொடுத்து என்னை பலாத்காரம் செய்து காணொளி எடுத்துவிட்டார். எனவே அவரை திருமணம் செய்யுமாறு வற்புறுத்தினேன். பிறகுதான் அவருக்கு திருமணமானது தெரியவந்தது. எனவே மனதை தேற்றிக்கொண்டேன்.

கல்வி போதாது, புத்தி தேவை

ஆனால், அந்த காணொளிவை பேஸ்புக்கில் வெளியிடுவேன் என கூறி விஜயகுமார் என்னை மிரட்டி உல்லாசத்திற்கு அழைத்தார். இதனால், கூலிப்படையினரை ஏவி கொலை செய்தேன் என்று கூறியுள்ளார். ஈஸ்வரி 2013ம் ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 500க்கு 498 மதிப்பெண்கள் எடுத்து மாநிலத்திலேயே 2வது இடம் பிடித்தவர். பிளஸ் 2 தேர்வில் 1183 மதிப்பெண் எடுத்து மாவட்ட அளவில் 2ம் இடம் பெற்றவர். சி.ஏ. முதல் தேர்விலும் பாஸ் ஆகிவிட்டார். ஆனால் கூடா நட்பு கேடாக முடிந்து ஈஸ்வரியின் வாழ்க்கையை சிறை கம்பிகளுக்கு பின்னால் தள்ளிவிட்டது.

Source: OneIndia