Press "Enter" to skip to content

திருவண்ணாமலை அருகே விவசாயிகள் வேதனை தண்ணீரின்றி கருகிய நெற்பயிர்களுக்கு தீவைப்பு

கண்ணமங்கலம்: திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அடுத்த காளசமுத்திரம் கிராமத்தில் தண்ணீர் இன்றி கருகிய நெல் பயிர்களுக்கு விவசாயிகள் தீயிட்டு கொளுத்திய சம்பவம் வேதனையை ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அடுத்த காளசமுத்திரம் கிராமத்தில் விவசாயிகள் மழைநீரை நம்பி பெருமளவில் நெல் பயிரிட்டிருந்தனர். அதேபோல் ஏராளமான விவசாயிகள் பருவமழையை நம்பி துவரை, வேர்க்கடலை உள்ளிட்டவைகளையும் பயிரிட்டுள்ளனர். இந்நிலையில், வேலூர், திருவண்ணாமலை உள்பட வடமாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்தபடி பெய்யவில்லை.

இதனால் கண்ணமங்கலம் அடுத்த காளசமுத்திரம் பகுதிகளில் நெல், வேர்க்கடலை, துவரை, சோளம் போன்ற பயிர்கள் நீரின்றி காய்ந்து வருகிறது. அறுவடைக்கு தயாராகும் நிலையில் இருந்த நெல் பயிர்கள் கருகியது. இந்த பயிர்களை கால்நடைகளுக்கு கூட தீவனமாக பயன்படுத்த முடியாது என கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த விவசாயிகள் தங்களது பயிர்களை தீயிட்டு கொளுத்தி வருகின்றனர். வியர்வை சிந்தி உழைத்தது வீணாகி ேபானதோடு, கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே என்ற வேதனை விவசாயிகளிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கருகிப்யபயிர்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »