மந்தைவெளியில் ஆயுதப்படை காவலரிடம் கைபேசி பறித்த 4 பேர் கைது: 2 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
Sep 14, 2018
மந்தைவெளியில் காவலர் சீருடையில் இருந்தவரிடமே காவல் துறை என்ற பயமில்லாமல் இருசக்கர வாகனத்தில் வந்து செல்போனைப் பறித்துச் சென்ற 4 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து 4 கைபேசிகள், 2 இருசக்கர வாகனங்கள் கைப்பற்றப்பட்டன.
சென்னை மந்தைவெளியில் வசிக்கும் ஆயுதப்படை காவலரிடம் செல்போனை துணிகரமாகப் பறித்துச் சென்ற நிகழ்வு கடந்த செப்டம்பர் 2-ம் தேதி அன்று நடந்தது.
மந்தைவெளி சாலையார் தெருவில் வசிப்பவர் மணிமாறன் (25). சென்னை ஆயுதப்படையில் காவலராக உள்ளார். இவர் கடந்த செப். 2 அன்று காலை சீருடையில் பணிக்குச் சென்றுகொண்டிருந்தார்.
மந்தைவெளி வி.கே.ஐயர் சாலை எச்டிஎப்சி வங்கி அருகில் நடந்து செல்லும்போது ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் அவரிடமிருந்த செல்போனைப் பறித்துச் சென்றது. காவல் துறை உடையில் இருப்பவர் என்று தெரிந்தும் தைரியமாக செல்போனை அந்தக் கும்பல் பறித்தது. திடீரென கைபேசி பறிக்கப்பட்டதைக் கண்டு காவலர் துரத்தினார். ஆனால் அவர்களின் மோட்டார் சைக்கிள் பறந்துவிட்டது.
அவர் அளித்த புகாரின் பேரில் கண்காணிப்புக் கேமரா காட்சிகளை ஆய்வு செய்த அபிராமபுரம் காவல் துறையினர், சந்தேகத்துக்குரிய 3 நபர்களும் அடுத்தடுத்த நாட்களில் மந்தைவெளி, அபிராமபுரம், மயிலாப்பூர், ராயப்பேட்டை பகுதிகளில் கைபேசி பறிப்பில் ஈடுபட்டதைக் கண்டுபிடித்தனர்.
காவல் துறையினர் நடத்திய விசாரணை, அவர்களது புகைப்படத்தை வைத்து நடத்திய விசாரணையில் கைபேசி பறிப்பில் ஈடுபட்டது அடையாறு கோவிந்தராஜபுரத்தில் வசிக்கும் வெங்கடேஷ் (20), திருவிக நகரைச்சேர்ந்த மேகசூர்யா (எ) பேய்க்குழந்தை (19), அடையாறு கஸ்தூரிபாய் நகரைச் சேர்ந்த சரவணன் (எ) அப்பு (19) மற்றும் 17 வயது சிறுவன் எனத் தெரியவந்தது.
மேற்கண்ட நான்கு பேரையும் காவல் துறையினர் கைது செய்து அவர்களிடமிருந்து 4 கைபேசிகள், வழிப்பறிக்குப் பயன்படுத்திய 2 மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர்.
Source: The Hindu