Press "Enter" to skip to content

குட்கா முறைகேடு வழக்கு: மாதவராவ், சீனிவாசராவுக்கு சிபிஐ காவல் மேலும் 3 நாட்கள் நீட்டிப்பு

image

 குட்கா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட மாதவராவ் மற்றும் சீனிவாச ராவ் ஆகியோரை மேலும் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

குட்கா முறைகேட்டில் அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு, பல கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்தது தொடர்பான விவரங்கள் அடங்கிய டைரி சிக்கியதை அடுத்து இதில் முறையாக விசாரணை நடக்கவில்லை என திமுக தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் மாதம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது.

கடந்த 5-ம் தேதி அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி டி.கே. ராஜேந்திரன், முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்டோர் வீடு அலுவலகங்கள் உட்பட 35 இடங்களில் சோதனை நடந்தது. சோதனையைத் தொடர்ந்து கடந்த 6-ம் தேதி காலை இடைத்தரகர்கள் 2 பேர், குட்கா கிடங்கு உரிமையாளர்கள் மாதவராவ், சீனிவாசராவ், உமாஷங்கர் குப்தா மூவரும் கைது செய்யப்பட்டனர்.

அவர்களுடன் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரி செந்தில் குமார், கலால் வரித்துறை அதிகாரி பாண்டியன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இதில் புரோக்கர்கள் ராஜேந்திரன், நந்தகுமார் இருவரைத் தவிர மற்ற ஐந்து பேரையும் சிபிஐ முதன்மை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் இந்த வழக்கில் சிபிஐ 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க மனு அளித்தது. இதையடுத்து சிபிஐ முதன்மை நீதிமன்ற நீதிபதி திருநீல பிரசாத் 4 நாட்கள் காவலுக்கு அனுமதி அளித்தார். நான்கு நாட்களும் குட்கா குடோன் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சிபிஐ அதிகாரிகள் சம்பந்தப்பட்ட மாதவராவ் உள்ளிட்டோரை அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

ஏற்கெனவே 4 நாட்கள் சிபிஐ காவல் முடிவடைந்த நிலையில், கைது செய்யப்பட்ட 5 பேரும் சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். மூன்று பேருக்கு செப்டம்பர் 20-ம் தேதி வரை நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டதை தொடர்ந்து 3 பேரும் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

விசாரணை முடிவடையாததால் மாதவராவ் மற்றும் சீனிவாசராவை மேலும் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு சிபிஐ மனுத்தாக்கல் செய்தது.

இதற்கான வாதங்கள் நடந்த நிலையில் இருவரையும் திங்கட்கிழமை மாலை வரை காவலில் விசாரிக்க அனுமதி அளித்த சிபிஐ முதன்மை நீதிமன்ற நீதிபதி திருநீல பிரசாத் மீண்டும் திங்கட்கிழமை மாலை (செப்-17) இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சிபிஐக்கு உத்தரவிட்டார்.

Source: The Hindu

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »
Mission News Theme by Compete Themes.