Go to ...
RSS Feed

நக்கீரன் கோபால் மீது புதுப்பிரிவில் வழக்குப் பதிவு செய்ய வழக்கறிஞர்களுடன் ஆலோசனையா?- ஆளுநருக்கு வைகோ கண்டனம்


வழக்கறிஞர்களைக் கொண்டு வழக்கை வேறு மாதிரியாகப் போட்டு, நக்கீரன் கோபாலை எப்படி சிறைக்கு அனுப்பலாம் என்று நேற்றைக்கு ஆலோசனை செய்திருக்கிறார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித். விபரீத விளையாட்டில் ஈடுபட வேண்டாம் என வைகோ எச்சரித்துள்ளார்.

கொடைக்கானல் நகரச் செயலாளர் தாயகம் கா.தாவூர் மகன் திருமணத்தில் கலந்துகொண்ட பின் வத்தலகுண்டில் செய்தியாளர்களிடம் இன்று வைகோ பேசியதாவது:

“தொழில் முனைவோர் அனைவரும் ராஜ்பவனுக்கு வந்தால் தொழில் தொடங்க ஏற்பாடு செய்து தருகிறேன் என்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கூறியதற்கு, நீங்கள் என்ன புரோக்கர் வேலை பார்க்கிறீர்களா? என்று அன்றைக்குக் கேட்டேன்.

வழக்கறிஞர்களைக் கொண்டு வழக்கை வேறு மாதிரியாகப் போட்டு, நக்கீரன் கோபாலை எப்படி சிறைக்கு அனுப்பலாம் என்று நேற்றைக்கு ஆலோசனை செய்திருக்கிறார் புரோஹித். எந்த வழக்கறிஞர் என்ற பெயரைச் சொல்ல விரும்பவில்லை. அதே வழக்கறிஞர் முதல்வரையும் சந்தித்து ஒரு மணி நேரம் உரையாடி இருக்கிறார்.

தமிழக ஆளுநருக்கும், முதல்வருக்கும் எச்சரிக்கை செய்கிறேன், நக்கீரன் கோபால் தனிநபர் அல்ல. பத்திரிகை – தொலைக்காட்சி ஊடகப் பிரதிநிதி. பத்திரிகை – தொலைக்காட்சி குரல் வளையை நெரிக்க முயல வேண்டாம். உங்களைவிட சர்வ வல்லமை பெற்ற பாசிச அரசுகள் மண்ணோடு மண்ணாகப் போயிருக்கின்றன. விபரீத விளையாட்டில் ஈடுபட வேண்டாம் என எச்சரிக்கிறேன்.”

இவ்வாறு வைகோ தனது பேட்டியில் கூறினார்.

Source: The Hindu

Tags: