Go to ...
RSS Feed

ஸ்ரீரங்கம் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா திருநெடுந்தாண்டகத்துடன் நாளை துவக்கம்


திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா நாளை திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கி 20 நாட்கள் நடைபெறுகிறது. 18ம் தேதி சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது.பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவதும், 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதுமான ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஆண்டு  முழுவதும் பல்வேறு உற்சவங்கள், விழாக்கள் நடந்து வருகின்றன. தேர்(கார்)த்திகை, மார்கழி மாதங்களில் 20 நாட்கள் நடக்கும் வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பு வாய்ந்தது.இந்தாண்டுக்கான வைகுண்ட ஏகாதசி விழாவின் பகல்பத்து முதல் திருநாள் வரும் 8ம் தேதி தொடங்குகிறது. இதையொட்டி நாளை(வெள்ளிக்கிழமை) இரவு உற்சவத்தின் பூர்வாங்க நிகழ்ச்சியாக ரங்கநாதர் சன்னதி மூலஸ்தானத்தில் திருமங்கையாழ்வார் பாடிய திருநெடுந்தாண்டகம் பகுதி பாடப்படும்.

20 நாட்கள் நடக்கும் உற்சவம் பகல்பத்து, ராப்பத்து என  இருபகுதிகளாக பிரித்து கூறப்படுகிறது.  8ம் தேதி  தொடங்கி வரும் 17ம் தேதி வரை பகல்பத்து எனப்படும் திருமொழித்திருநாள் நடக்கிறது. இந்த நாட்களில் உற்சவர் நம்பெருமாள் தினமும் அதிகாலையில் புறப்பட்டு கோயில் 2ம் பிரகாரத்தில் உள்ள அர்ச்சுன மண்டபத்தில் பல்வகை உயர்ந்த திருவாபரணங்கள் அணிந்து சிறப்பு அலங்காரத்தில் ஆஸ்தானமிருப்பார். அப்போது அரையர்கள் நம்பெருமாள் முன் ஆழ்வார்களின் திருமொழிப்பாசுரங்களை அபிநயத்தோடு பாடிக்காட்டுவர். அரையர்களின் இசையை கேட்டவாறு மாலை வரை அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிக்கும் நம்பெருமாள் மாலை 6.15 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டு உபயங்கள் கண்டருளியவாறு இரவு 9.30 மணியளவில் மூலஸ்தானம் சென்றடைவார். பகல்பத்து உற்சவத்தின் நிறைவு நாளான 17ம் தேதி உற்சவர் நம்பெருமாள் மோகினி அலங்காரம் எனப்படும் நாச்சியார் திருக்கோலத்தில் பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்.

சொர்க்கவாசல்: வைகுண்ட ஏகாதசிவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரமபதவாசல் திறப்பு வரும் 18ம் தேதி அதிகாலை நடக்கிறது. அதிகாலை 4.15 மணியளவில் நம்பெருமாள் பாண்டியன் கொண்டை, கிளிமாலை மற்றும் ரத்தின அங்கி அணிந்து பக்தர்களின் கண்களை நிறைக்கும்  அழகுடன் மூலஸ்தானத்தில் இருந்து சிம்ம கதியில் புறப்படுவார். அதை தொடர்ந்து அதிகாலை 5.30 மணியளவில் பரமபதவாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக பெருமாள் வெளியில் வருவார். காலை 7.30 மணியளவில் நம்பெருமாள் ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி மண்டபத்தில் எழுந்தருள்வார். அங்கு இரவு வரை பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்.அதைத்தொடர்ந்து ராப்பத்து விழா தொடங்குகிறது.

Source: Dinakaran

Tags: