Go to ...
RSS Feed

கணினி மயமான திண்ணை: சசிகலாவை சந்தித்த பூங்குன்றன், அலர்ட் …6 நிமிட வாசிப்புகைபேசி இணையத் தரவு(டேட்டா) ஆனில் இருக்க… வாட்ஸ் அப் மெசேஜ் டைப்பிங் ஆனபடியே இருந்தது.


கைபேசி இணையத் தரவு(டேட்டா) ஆனில் இருக்க… வாட்ஸ் அப் மெசேஜ் டைப்பிங் ஆனபடியே இருந்தது.

“பூங்குன்றன்… இந்தப் பெயரை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்து விட முடியாது. ஜெயலலிதாவின் நேரடி உதவியாளர். தாடியும் குங்குமப்பொட்டு சகிதமாக கார்டனில் சகல இடத்துக்கும் செல்லும் அதிகாரம் படைத்தவராக இருந்தவர். ஜெயலலிதா எந்த மனநிலையில் இருக்கிறார் என்பதை சசிகலா கூட சில நேரங்களில் பூங்குன்றனை கேட்டுத்தான் தெரிந்து கொள்வார் என்று சொல்வார்கள். கார்டனுக்கு வரும் புகார்கள் தொடங்கி, வி.ஐ.பி.கள் வரை பூங்குன்றன் பார்வை படாமல் நகர முடியாது.

அதிமுகவினர் அனுப்பும் பல புகார்களை ஜெயலலிதா கவனத்துக்கே கொண்டு போகாமல் தனி ரூட்டில் பூங்குன்றனே ஒப்பந்தம் (டீல்)செய்தார் என்று கூட இவர் மீது அப்போது புகார் வாசிக்கப்பட்டது. ஜெயலலிதாவுக்கு எவ்வளவு நம்பிக்கைக்கு உரியவராக பூங்குன்றன் இருந்தாரோ அதே அளவுக்கு சசிகலாவின் நம்பிக்கை நாயகனாகவும் வலம் வந்தார். பூங்குன்றன் மீது சில புகார்கள் நேரடியாக ஜெயலலிதா கவனத்துக்குப் போய், அவர் கோபப்பட்ட போது, சசிகலாதான் தலையிட்டு கோபத்தை தணிய வைத்தார் என்பதெல்லாம் கடந்த கால வரலாறு. அந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த பூங்குன்றன் இப்போது எங்கே என்ற கேள்வி அதிமுகவினர் மத்தியில் அடிக்கடி வருவதுண்டு. அந்த பூங்குன்றனை கடந்த வாரத்தில் அமைச்சர் ஒருவர் சந்தித்திருக்கிறார்.

அப்போது, ‘உங்க மேல நாங்க மிகுந்த மரியாதை வெச்சிருக்கோம். அம்மா இருக்கும்போது நீங்க செஞ்ச உதவிகள் எதையும் நாங்க மறக்கவில்லை. அம்மாவுக்கு நீங்க எப்படி இருந்தீங்களோ அதே மாதிரி எடப்பாடி அண்ணனுக்கும் இருங்க. அவரும் அதை விரும்புறாரு. நீங்க கூட இருந்தால் இன்னும் பலமாக இருக்கும் என நினைக்கிறாரு. உங்களுக்கு தேவையான எல்லாம் செஞ்சு கொடுக்க ரெடியா இருக்கோம்.உங்களை உடனடியாக அவரு பார்க்கணும்னு சொன்னாரு…’ என்று சொல்லியிருக்கிறார் அந்த அமைச்சர்.

அதற்கு பூங்குன்றனோ, ‘ எடப்பாடி அண்ணன் மீது எனக்கும் மிகப்பெரிய மரியாதை உண்டு. ஆனால், அம்மா இடத்தில் அவரை வெச்சுப்பார்க்க எனக்கு மனசு ஒப்புக்கலை. தினகரன் தரப்புல இருந்தும் என்னை கூப்பிட்டாங்க. நான் வர முடியாதுன்னு சொல்லி அனுப்பிட்டேன். அதனால அண்ணனை தப்பா நினைச்சுக்க வேண்டாம்னு சொல்லுங்க. இப்போ நான் அரசியல் பக்கம் இருந்து விலகி ஆன்மீகத்தில் அதிக கவனம் செலுத்த ஆரம்பிச்சுட்டேன். சீக்கிரமே அண்ணனை வந்து பார்க்கிறேன். ஆனால் அவரோடவே இருக்க முடியாது..’ என்று சொல்லி இருக்கிறார்.

இந்த தகவல் எடப்பாடிக்கும் சொல்லப்பட்டிருக்கிறது. ‘மறுபடியும் பேசிப்பாருங்க…’ என்று சொன்னதாக சொல்கிறார்கள்.” என்று முடிந்தது அந்த மெசேஜ்.

“பூங்குன்றன் மீது இப்போது என்ன எடப்பாடிக்கு திடீர் பாசம்? ” என்ற கேள்வியை ஃபேஸ்புக் கேட்டது.

பதிலை தொடர்ந்து டைப்பிங் செய்ய ஆரம்பித்தது வாட்ஸ் அப்.

“சொல்றேன்… ஆழ்வார் பாசுரங்களைப் பற்றி பேசுவது, கோயில் குளமென சுற்றி வருவதுமாகத்தான் இருந்தார் பூங்குன்றன். அப்போதெல்லாம் அவரை எடப்பாடி கண்டுகொள்ளவில்லை. ‘அண்மையில் பரப்பன அக்ரஹாரா சிறைக்கு சென்று சசிகலாவை சந்தித்திருக்கிறார் பூங்குன்றன். சசிகலா வெளியே வந்த பிறகு, ஜெயலலிதாவுக்கு எப்படி இருந்தாரோ அப்படி சசிகலாவுக்கும் இருக்கப் போகிறார் பூங்குன்றன். அதற்கான சந்திப்புதான் ஜெயிலில் நடந்திருக்கிறது.’ என்று உளவுத்துறை மூலமாக ஒரு அறிக்கை எடப்பாடிக்கு வந்திருக்கிறது. அதைப் பார்த்த பிறகுதான் பூங்குன்றனுக்கு தூது அனுப்பியிருக்கிறார் எடப்பாடி. ஜெயலலிதா ரகசியங்கள் தெரிந்த ஒருவர் கூடவே இருந்தால் நல்லது என எடப்பாடி நினைக்கிறார். எந்தக் காரணத்துக்காகவும் சசிகலா பக்கம் பூங்குன்றன் சாய்ந்துவிடக் கூடாது என்பதுதான் எடப்பாடியின் எண்ணம்.

அதற்காகவே இந்த கரிசனமும் அக்கறையும்” என்ற பதில் மெசேஜுக்கு செண்ட் கொடுத்துவிட்டு, ஆஃப்லைனில் போனது வாட்ஸ் அப்.

Source: Minambalam.com