Press "Enter" to skip to content

‘இந்து தமிழ்’, எஸ்ஆர்எம் கல்வி குழுமம் சார்பில் ‘இனிது இனிது தேர்வு இனிது’ நிகழ்ச்சி; பிடித்தமான படிப்பை தேர்வு செய்து படித்தால் வாழ்க்கையில் வெற்றிபெறலாம்: பிளஸ் 2 மாணவ-மாணவிகளுக்கு ஐஏஎஸ் அதிகாரி உதயசந்திரன் அறிவுரை

பிளஸ் 2 மாணவர்கள் தங்களுக்குப் பிடித்தமான படிப்பை தேர்வுசெய்து படித்தால் வாழ்க்கையில் முன்னேறலாம் என்று ‘இந்து தமிழ்’ நாளிதழும், எஸ்ஆர்எம் கல்வி குழுமமும் இணைந்து சென்னையில் நடத்திய ‘இனிது இனிது தேர்வு இனிது’ நிகழ்ச்சியில் ஐஏஎஸ் அதிகாரி த.உதயச்சந்திரன் கூறினார்.

‘இந்து தமிழ்’ நாளிதழ், எஸ்ஆர்எம் கல்விக் குழுமம் சார்பில் ‘இனிது இனிது தேர்வு இனிது’ என்ற பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கான வழிகாட்டு நிகழ்ச்சி சென்னை அண்ணா நகர் எஸ்பிஓஏ மேல்நிலைப்பள்ளி கலையரங்கில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை தமிழக அரசின் தொல்லியல்துறை ஆணையரும், பள்ளிக்கல்வித் துறையின் முன்னாள் செயலருமான த.உதயச்சந்திரன் தொடங்கிவைத்தார். அப்போது அவர் பேசியதாவது:தேர்வில் மதிப்பெண் முக்கியம்தான். ஆனால், அது மட்டுமே வாழ்க்கை அல்ல. அதிக மதிப்பெண் எடுக்காத பலர் வாழ்க்கையில் வெற்றி பெற்றுள்ளனர். மதிப்பெண் என்பது மாணவர்களின் நிலையை அறிவியல்பூர்வமாக அளவிடும்ஓர் அளவுகோல் மட்டுமே. நான் எஸ்எஸ்எல்சி தேர்வில் கணிதத்தில் 100-க்கு 100 வாங்கினேன். ஆனால், பிளஸ் 2-வில்கணிதத்தில் என்னால் 200-க்கு 200 மதிப்பெண் எடுக்க முடியவில்லை. 4 மதிப்பெண் குறைந்ததை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பிளஸ் 2-வில் கணிதத்தில் சென்டம் பெற முடியாத நான் ஐஏஎஸ் தேர்வில் அகில இந்திய அளவில் 38-வது ரேங்க் பெற்று தேர்வானேன். அதனால்தான் சொல்கிறேன். மதிப்பெண் மட்டுமே வாழ்க்கை அல்ல.

இன்றைய கல்விச்சூழலில் பள்ளியில்புதிய பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. புதிய பிளஸ் 1 பாடப்புத்தகத்தை நன்கு படித்தால் தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகளில் சிறப்பாக வெற்றிபெற முடியும். முதல்முறையாக பிளஸ் 1, பிளஸ் 2 பாடப்புத்தகத்தில் அடுத்து என்ன படிக்கலாம், என்னென்ன படிப்புகள் எங்கெங்கு வழங்கப்படுகின்றன என்பது போன்ற விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. மருத்துவம், பொறியியல் படிப்பு மட்டுமே வாழ்க்கை அல்ல. அதை தாண்டி எத்தனையோ நிறைய படிப்புகள் உள்ளன. மாணவர்கள் தங்களுக்குப் பிடித்தமான படிப்புகளை தேர்வுசெய்து படித்தால் வாழ்க்கையில் வெற்றிபெறலாம்.

இவ்வாறு உதயச்சந்திரன் கூறினார்.

கல்லூரி தேர்வில் கவனம் தேவைஎஸ்ஆர்எம் பல்கலைக்கழக டீன் துரைவேலு பேசும்போது, “பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு உயர்கல்வி செல்லும் மாணவர்கள் கல்லூரியை தேர்வுசெய்வதில் கவனமாக இருக்க வேண்டும். வேலைவாய்ப்பு கிடைக்கும் நிலை, தரமான ஆசிரியர்கள், உள்கட்டமைப்பு வசதி, கல்விக்கட்டணம் ஆகியவற்றை ஆய்வுசெய்து கல்லூரியை தேர்வுசெய்ய வேண்டும். எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் ஆண்டுதோறும் 5 ஆயிரம் பேர் வளாக நேர்முகத்தேர்வு மூலம் வேலைவாய்ப்பு பெறுகிறார்கள். கூகுள், இன்ஃபோசிஸ், டிசிஎஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களில் அவர்களுக்கு வேலை கிடைக்கிறது. மிகவேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்பத்துறைகளான செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல், டேட்டா அனலிட்டிக்ஸ், ரொபாட்டிக்ஸ், கிளவுட் கம்ப்யூட்டிங் போன்ற பாடப்பிரிவுகளில் பிடெக் படிப்புகள் வழங்கப்படுகின்றன” என்றார்.

எஸ்ஆர்எம் பல்கலைக்கழக கல்வி ஆலோசகர் வெங்கடநாராயணன், தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகளுக்கு எப்படி தயாராக வேண்டும், அதில் எந்த முறையில் கேள்விகள் கேட்பார்கள் என்பது குறித்து எடுத்துரைத்தார். கல்வியாளரும், வித்யா கல்வி நிறுவனங்களின் இயக்குநருமான எஸ்.பி.சுப்ரமணியன் மாணவர்களின் தன்னம்பிக்கையை மேம்படுத்தும் வகையில் ஊக்கவுரை ஆற்றினார். இதைத்தொடர்ந்து, கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களில் முழு மதிப்பெண் பெறுவதற்கான உத்திகளையும், ஆலோசனைகளையும் அந்தந்த பாடங்களின் நிபுணர்கள் எடுத்துரைத்தனர். ‘இந்து தமிழ்’ முதுநிலை உதவி ஆசிரியர் மு.முருகேஷ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற எழும்பூர் மேரி கிளப் வாலா ஜாதவ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி கணித ஆசிரியை எம்.செல்வி கூறும்போது, “இந்த வழிகாட்டி நிகழ்ச்சி மாணவ-மாணவிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது” என்றார்.

Source: The Hindu

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »