Go to ...
RSS Feed

ஏலச்செடிகள் கருகின உறைபனியால் காய்கறி விவசாயமும் பாதிப்பு


* மூணாறு விவசாயிகள் பரிதவிப்பு

மூணாறு : மூணாறில் தற்போது நிலவும் கடும் உறைபனி காரணமாக காய்கறி மற்றும் ஏலக்காய் செடிகள் கருகி வருவதால் விவசாயிகள் பரிதவித்து வருகின்றனர். மூணாறு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த இரண்டு வாரங்களாக கடும் உறைபனி நிலவுகிறது. வெப்பத்தின் அளவு குறைந்து குளிர் மைனஸ் 4 டிகிரி செல்ஸியஸ் வரை உயர்ந்துள்ளது. மூணாறில் நிலவும் உறைபனி சுற்றுலாப் பயணிகளுக்கு கொண்டாட்டமாக கருதப்பட்டாலும், கடும் பனி காரணமாக காய்கறிகள் கருகி வருவதால், விவசாயிகள் திண்டாடி வருகின்றனர்.

இடுக்கி மாவட்டத்தில் பூப்பாறை, ராஜாக்காடு, பைசன்வாலி போன்ற பகுதிகளில் 1.2 லட்சம் ஏக்கரில் ஏலக்காய் சாகுபடி நடைபெறுகிறது, ஜூன் மாதத்தில் இருந்து ஏலக்காய் எடுப்பு ஆரம்பமாகும். ஆனால் கடந்த ஒரு வாரமாக கடும் குளிர் மற்றும் பனிப்பொழிவு காரணமாக ஏலச்செடிகள் மற்றும் காய்கறிகள் வளர்ச்சியில்லாமல் முடங்கி கிடக்கிறது இதனால் ஏலக்காய் மகசூல் கடும் பாதிப்பு அடைந்துள்ளது இதன் மூலம் பல லட்சம் நஷ்டம் அடைந்ததாக விவசாயிகள் கூறினார்.

மேலும் மூணாறு அருகே விவசாயத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த இடமாக கருதப்படுகிறது வட்டவடையில் காரட், பீட்ரூட், பீன்ஸ், முட்டைகோஸ், உருளைக்கிழங்கு போன்ற முக்கிய காய்கறிகள் ஏக்கர் கணக்கில் பயிரிடப்பட்டுள்ளது. இந்த விளைச்சல் மூலம் கிடைக்கும் லாபம் மட்டுமே இவர்களின் வாழ்வாதாரமாகும். இப்பகுதியில் விவசாயத்தை நம்பி மட்டும் 1000க்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் வட்டவடை பகுதியில் நிலவி வரும் கடும் பனிப்பொழிவு காரணமாக பயிரிடப்பட்ட காய்கறிகள் முற்றிலும் கருகின. இவ்வாறு கருகிய காய்கறிகளை விற்பனை முடியாத காரணத்தால் விவசாயிகள் கடும் மனஉளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர். கடந்த ஆண்டு மூணாறில் பெய்த அடைமழை (கனமழை) காரணமாக பயிரிடப்பட்ட காய்கறிகள் முழுவதும் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. தற்போது விவசாயிகள் இயல்பு நிலைக்கு திரும்பி மீண்டும் காய்கறிகள் உற்பத்தியில் அடியெடுத்து வைத்த நிலையில் மீண்டும் உறைபனி காரணமாக பல சோதனைகளுக்கு விவசாயிகள் உள்ளாக வேண்டிய சூழல் உருவாகியுள்ளது .

இதுகுறித்து வட்டவடை பகுதி விவசாயிகள் கூறுகையில்,“ வட்டவடை பகுதியில் நிலவிவரும் உறைபனி காரணமாக ஏக்கர் கணக்கில் பயிரிடப்பட்ட காய்கறிகள் கருகியுள்ளன. இதன் காரணமாக எங்கள் குடும்பங்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் இங்கு விளைச்சல் செய்யப்படும் காய்கறிகள் மூணாறு மட்டுமின்றி தமிழ்நாடு மற்றும் கேரளாவில் பல மாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. காய்கறிகள் கருகிய காரணத்தால் ஏற்றுமதி தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் இங்கு விவசாயம் செய்யப்படும் காய்கறிகளை கேரள தோட்டக்கலை துறை அதிகாரிகள் மொத்தமாக வாங்கி சென்று பல இடங்களில் விற்பனை செய்து வருகின்றனர். இங்கு ஒரு மூடை காய்கறி 300 ரூபாய் கொடுத்து வாங்கும் அதிகாரிகள் அதை 600 ரூபாய்க்கு விற்பனை செய்கின்றனர். நாங்கள் கொடுக்கும் காய்கறிகளுக்கு ரசீதும் அவர்கள் தருவதில்லை. அதையும் மீறி புகார் அளித்தால் குறிப்பிட்ட சில அதிகாரிகள் மிரட்டல் விடுக்கின்றனர். எனவே, வட்டவடை விவசாயிகளின் நலனில் அக்கறை கொண்டு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறினார்.

Source: Dinakaran

Tags: