Go to ...
RSS Feed

சாலையோரம் தனியார் பஸ்களை நிறுத்துவதால் கொடைக்கானலில் போக்குவரத்து நெருக்கடி


கொடைக்கானல் : கொடைக்கானலில் முக்கிய சாலைகளில் தனியார் பேருந்துகள் நிறுத்துவதால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது. மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் ஆண்டுதோறும் சுற்றுலா பயணிகளின் வருகை இருந்து கொண்டே இருக்கும். கொடைக்கானலில் தனியார் பேருந்துகள் பல்வேறு ஊர்களுக்கு இயக்கப்பட்டு வருகின்றன. இந்த தனியார்பேருந்துகள் அனைத்தும் கொடைக்கானலுக்கு அதிகாலையில் வந்துவிடும். மாலை 6 மணிக்கு பிறகுதான் வெளியூர்களுக்கு புறப்பட்டு செல்லும். அதுவரை இந்தபேருந்துகள் கொடைக்கானலில் உள்ள பிரதான சாலைகளிலேயே நிறுத்தப்படுகின்றன. கொடைக்கானல் உட்வில் சாலை, கோக்கர்ஸ் வாக் அருகே உள்ள சாலை, பி.டி.சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் இவை நிறுத்தப்படுகின்றன.

சுமார் 15க்கும் மேற்பட்ட இந்த தனியார் பஸ்களை பிரதான சாலைகளில் நிறுத்திவிட்டு செல்வதால் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக, வார இறுதி நாட்களில் இந்த போக்குவரத்து நெரிசல் அதிகமாகி சுற்றுலாப் பயணிகள் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர்.தனியார்பேருந்துகள் போக்குவரத்து மற்றும் காவல்துறையினரை தனியாக கவனித்து விடுவதாக கூறப்படுகிறது. இதனால் காவல்துறை நடவடிக்கை எடுப்பதில்லை என்று கூறப்படுகிறது. எந்த ஒரு நிறுத்த கட்டணமும் செலுத்தாமல் பிரதான சாலைகளில் நிறுத்தி போக்குவரத்து இடையூறை ஏற்படுத்தி வரும் இந்த தனியார்பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்களும் சுற்றுலாப் பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மக்கள் கூறுகையில், ‘‘நகராட்சி சாலைகளில் இப்படிபேருந்துகள் நிறுத்தினால் நகராட்சி துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். நெடுஞ்சாலைத்துறை சாலைகளில் நிறுத்தும்பேருந்துகள் மீது நெடுஞ்சாலை துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் இங்கு அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. இதனால் கடும் நெருக்கடி ஏற்படுகிறது. எனவே காவல் துறையினர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Source: Dinakaran

Tags: