Press "Enter" to skip to content

பட்ட துன்பமும் பெற்ற அனுபவமும்: விவேகானந்தர் உருவான …8 நிமிட வாசிப்பு*உனக்குத் தேவையான எல்லா வலிமையும், உதவியும் உனக்குள்ளேயே உள்ளன.*

விவேகானந்தர் பிறந்த தின (ஜனவரி 12) கட்டுரை!

ஆசிஃபா

எழுமின் விழிமின் குறிக்கோளை அடையும் வரை தளராது செல்மின்

உனக்குத் தேவையான எல்லா வலிமையும், உதவியும் உனக்குள்ளேயே உள்ளன.

நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய்; உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்! (ஆனால் முயற்சி தேவை)

விவேகானந்தர் என்றதும் நமக்கு நினைவிற்கு வருபவை ‘பொன்மொழிகள்’தான். ஒரு விதத்தில் பார்க்கப்போனால், அவரது சொல்லே அவரது அடையாளம். காரணம், அந்தச் சொல்லுக்குப் பின்னால் இருந்த தீவிரமும் நேர்மையும்.

1863, ஜனவரி 12 அன்று கல்கத்தாவில் நரேந்திரநாத் தத்தாவாகப் பிறந்து, பத்தொன்பதாம் நூற்றாண்டின் தலைசிறந்த தலைவர்களுள் ஒருவராகத் திகழும் சுவாமி விவேகானந்தரின் சொற்கள் இன்றுவரை நம்மைச் சுற்றி நம்மை உற்சாகம் அடையச் செய்பவை. “அமெரிக்க சகோதர சகோதரிகளே…” என்ற அவரது பேச்சு, இன்றுவரை போற்றப்படும் ஒன்று. ராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடரான, தலைசிறந்த பேச்சாளரான, இளைஞர்களுக்கான பல கருத்துகளைச் சொன்னவரான சுவாமி விவேகானந்தர் பற்றி நமக்குத் தெரிந்த அளவிற்கு, நரேந்திரநாத் தத்தாவைப் பற்றித் தெரியுமா?

இளமையில் பட்டினி

கடவுள் பக்தி அதிகமுள்ள ஒரு பாரம்பரியமான குடும்பத்தில் பிறந்த நரேந்திரநாத், மிகச் சிறு வயதிலேயே யோகா, தியானம் போன்றவற்றில் ஈடுபட்டார். நல்ல வசதியான குடும்பமாக இருந்து வந்த அவருடைய குடும்பம், அப்பாவின் மறைவிற்குப் பின் வறுமைக்குள் சிக்கியது. பல வேளைகளில், மதியம் வெளியில் விருந்து சாப்பிட்டதாகப் பொய் சொல்லிவிட்டுச் சாப்பிடாமல் இருப்பார் நரேந்திரநாத். காரணம், தான் சாப்பிடாமல் இருந்தால் தன் குடும்பத்தில் உள்ளவர்களுக்குக் கொஞ்சம் சாப்பாடு அதிகமாகக் கிடைக்கும் என்பதுதான்! இப்படிப் பற்பல நாட்கள் சாப்பிடாமல் பசியுடனே இருந்திருக்கிறார். கேத்ரி அரசர் அஜித் சிங் நரேந்திரநாத் அம்மாவிற்குக் குடும்பச் செலவிற்காக மாதா மாதம் 100 ரூபாயை அனுப்பியிருக்கிறார்.

மிகவும் கூர்மையான அறிவுத்திறன் கொண்டவராகத் திகழ்ந்தார் நரேந்திரநாத். நூலகத்திலிருந்து பல புத்தகங்களை எடுத்துச் சென்று, மறுநாளே திருப்பிக் கொடுத்துவிட்டு வேறு புத்தகங்களை எடுத்துச் செல்வார். இதைக் கண்டு, இவர் வாசித்தாரா இல்லையா என்பதைச் சோதனை செய்திருக்கிறார் நூலகர். இவர் புத்தகத்தைப் பற்றிய குறிப்பை மட்டும் சொல்வதோடு நில்லாமல், வெவ்வேறு பாகங்களிலிருந்து மேற்கோள்களையும் சொல்வார். அந்தளவிற்கு வேகமாக வாசித்துக் கிரகித்துக்கொள்ளும் சக்தி அவருக்கு இருந்தது.

இவ்வளவு புத்திசாலித்தனமாக இருந்தபோதிலும், வெகுநாட்களுக்கு வேலை கிடைக்காமல் இருந்திருக்கிறார். அப்போதுதான், அவர் மனதில் மிகப் பெரிய குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. கடவுள் இல்லை என்ற எல்லை வரைக்கும் சென்றிருக்கிறார். பிஏ பட்டம் வைத்திருப்பதால், ஆணவத்தில் அவர் இருப்பதாகப் பலரும் தெரிவித்திருக்கிறார்கள். வாழ்வின் மீதான விரக்தியும், வேலை கிடைக்காத கோபமும் அவரை மிகுந்த குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கின்றன.

இக்காலகட்டத்தில்தான், ராமகிருஷ்ண பரமஹம்சரின் அறிமுகம் ஆங்கிலப் பேராசிரியர் ஒருவர் மூலம் கிடைக்கிறது. பாடம் நடத்திக்கொண்டிருக்கையில், “trance” என்ற சொல்லை விளக்கும்போது அதை முழுமையாகப் புரிந்துகொள்ள, தக்ஷினேஸ்வர் கோவிலில் உள்ள ராமகிருஷ்ணரைச் சென்று பார்க்க வேண்டும் என்று சொன்னார் ஆசிரியர். இதைக் கேட்டுச் சில மாணவர்கள் அங்கு சென்றனர். அவர்களில் நரேந்திரநாத்தும் ஒருவர்.

அதன் பிறகு, அவருடனான சந்திப்பு மீண்டும் நிகழ்ந்தது. ஆரம்பத்தில், பரமஹம்சரின் கருத்துகளை ஏற்க மறுத்தார் நரேந்திரநாத். அப்பாவின் மரணமும் அதைத் தொடர்ந்து வேலை கிடைக்காததும், சொத்துப் பிரச்சனைகளும் விவேகானந்தரை பரமஹம்சரிடம் ஆறுதல் தேடச் செய்தன. காலப்போக்கில், அவருடைய கருத்துகளை நம்பி, பரமஹம்சரைத் தனது குருவாக ஏற்றுக்கொண்டார். பரமஹம்சரின் இறுதி நாட்களில் அவரை முழுவதுமாகக் கவனித்துக்கொண்டது விவேகானந்தரும் பிற சீடர்களுமே.

பரமஹம்சரின் மரணத்திற்குப் பின் அவரது சீடர்களுக்கான உதவிகள் எல்லாம் நின்றுவிட்டன. தங்குவதற்கு இடமில்லாமல், சாப்பாடில்லாமல் பலரும் வீட்டிற்குத் திரும்பினர். பொறுப்பு நரேந்திரனிடம் கொடுக்கப்பட்டிருந்ததால், குறைவான வாடகைக்கு ஒரு வீட்டில் தங்கினார்கள். அங்கு தினமும் பல மணிநேரங்கள் தியானத்திலும், பிரார்த்தனையிலும் கழித்தனர்.

சில நாட்களில், நரேந்திரநாத் அங்கிருந்து ஒரு தண்ணீர் “கமண்டலம்”, கையில் ஒரு கம்பு, தனக்கு மிகவும் பிடித்தமான இரண்டு புத்தகங்களுடன் (பகவத் கீதை, The Imitation of Christ) நெடும் பயணம் கிளம்பினார். ஐந்தாண்டுகள் தொடர்ந்து இந்தியாவின் வெவ்வேறு இடங்களுக்குப் பயணித்து, பல மனிதர்களுடன் வசித்து உரையாடி, பல மதங்களின் நம்பிக்கைகளைப் பற்றித் தெரிந்துகொண்டார்.

1893ஆம் ஆண்டில், சிக்காகோவிற்குச் செல்லும் போது, ராஜா அஜித் சிங் சூட்டிய விவேகானந்தர் என்ற பெயருடன் புறப்பட்டார். அதன் பிறகு விவாகானந்தரின் உரைகள், பல நாடுகளில் அவர் ஏற்படுத்திய தாக்கம், இன்றுவரை நம் வாழ்வில் அவருடைய செல்வாக்கு ஆகியவை நாமெல்லாம் அறிந்ததே.

“வைரம்” தன் நிலையை அடைய பற்பல ஆண்டுகள் அதிகமான அழுத்தத்தில், வெப்பத்தில் இருக்க வேண்டும். அப்படித்தான் அனைவரும். வாழ்வில் பல அழுத்தங்களும், பிரச்சினைகளுமே நமக்கான தெளிவையும், நம்பிக்கையையும் தருகின்றன. நரேந்திரநாத் விவேகானந்தராக மாறியது அவ்வளவு எளிதாக நிகழ்ந்து விடவில்லை. பல ஆண்டுகள் போராட்டத்திற்குப் பிறகே நிகழ்ந்தது.

அவர் வாழ்க்கை நமக்குக் கற்றுக்கொடுப்பது, “நீ பட்ட துன்பத்தை விட அதில் நீ பெற்ற அனுபவமே சிறந்தது”.

Source: Minambalam.com

More from செய்திகள்More posts in செய்திகள் »