Go to ...
RSS Feed

அப்பல்லோவில் அமைச்சர்களும் சாப்பிட்டனர்: திவாகரன்3 நிமிட வாசிப்புஅப்பல்லோவில் அமைச்சர்கள், அதிகாரிகள் என பலரும் சாப்பிட்டதாக சசிகலா சகோதரர் திவாகரன் க…


அப்பல்லோவில் அமைச்சர்கள், அதிகாரிகள் என பலரும் சாப்பிட்டதாக சசிகலா சகோதரர் திவாகரன் குற்றம் சாட்டியுள்ளார்.

ஜெயலலிதா சிகிச்சைக்கு ஆன செலவுகளை அப்பல்லோ நிர்வாகம் விசாரணை ஆணையத்தில் அறிக்கையாக தாக்கல் செய்திருந்த நிலையில், அதில் உணவு மற்றும் குடிநீர் செலவு 1 கோடியே 17 லட்சத்து 4 ஆயிரம் ரூபாய் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதுகுறித்து கருத்து தெரிவித்திருந்த அமைச்சர் ஜெயக்குமார், “சசிகலா குடும்பம் பல அறைகளை வாடகைக்கு எடுத்துச் சாப்பிட்டதற்குதான் ஒன்றரை கோடி செலவு ஆனது” என்று குற்றம் சாட்டியிருந்தார்.

கோவையில் இன்று (ஜனவரி 12) அண்ணா திராவிடர் கழகத்தின் மாவட்ட துணைச் செயலாளர் சகாபுதீன் இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்த திவாகரன் இதுகுறித்து பதிலளித்தார்.

“சசிகலா தரப்பினர் மட்டுமே அப்பல்லோ மருத்துவமனையில் சாப்பிடவில்லை. சசிகலா குடும்பத்தில் என்ன ஒன்றரை லட்சம் பேரா இருக்கிறார்கள்? அமைச்சர்கள், அமைச்சர்களின் பி.ஏ.க்கள், அதிகாரிகள் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், பாதுகாவலர்கள் என பலரும் அப்பல்லோவில்தான் இருந்தனர். அவர்கள் சாப்பிட்டுவிட்டு கணக்கில்தான் கூறிவிட்டுவருவர். அப்பல்லோவில் டீக்கு ரூ.350, இட்லிக்கு ரூ. 650 என ஃபைவ் விண்மீன் ஹோட்டல் போலத்தான் பில் போடுவார்கள். ஜெயலலிதா சிகிச்சை குறித்து விசாரிக்க அப்பல்லோவுக்கு வருகை தரும் அனைவருக்கும் அங்குதான் உணவு பரிமாறப்பட்டது” என்று தெரிவித்த திவாகரன்,

சசிகலா தரப்பினர் 10பேர்தான் அப்பல்லோவில் இருந்திருப்பார்கள். சசிகலா மீது குற்றச்சாட்டு கூறும் அனைவரும் சேர்ந்துதானே சசிகலாவை பொதுச் செயலாளராக தேர்ந்தெடுத்தனர். அப்போது இதனை மறந்திருந்தார்களா? பன்னீர்செல்வம் அன்று மறதியில் இருந்தாரா என்றும் கேள்வி எழுப்பினார். சசிகலா குடும்பத்திலிருந்து தான் வெளியேறிவிட்டதாகவும் திவாகரன் தெரிவித்துள்ளார்.

மேலும், “முதல்வர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது, அதனை அமைச்சர் ஜெயக்குமார் மறுத்துள்ளார். இது ஆரம்பகட்டம்தான், இனிமேல்தான் தங்களிடம் இருக்கும் ஆவணங்களை சம்பந்தப்பட்டவர்கள் வெளியிடுவர். எனவே இதனைப் பற்றி தற்போது கருத்து கூற இயலாது. தினகரன் கருத்து தெரிவிக்காதது குறித்து அவரிடம்தான் கேட்க வேண்டும்” என்றும் தெரிவித்துள்ளார்.

Source: Minambalam.com