Go to ...
RSS Feed

பொங்கல்: இரண்டாவது நாளாக மக்கள் கூட்டம்!3 நிமிட வாசிப்புபொங்கல் பண்டிகையையொட்டி சென்னையிலிருந்து மற்ற ஊர்களுக்கு நேற்று மட்டும் சிறப்புப் பேருந்துகளில…


பொங்கல் பண்டிகையையொட்டி சென்னையிலிருந்து மற்ற ஊர்களுக்கு நேற்று மட்டும் சிறப்புப் பேருந்துகளில் 1 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்.

போகி பண்டிகைக்கும் அரசு விடுமுறை அறிவித்ததால், இந்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு 6 நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளது. சனி, ஞாயிற்றுக் கிழமைகளுடன் சேர்த்து ஜனவரி 14, 15, 16, 17 ஆகிய நான்கு நாட்களும் விடுமுறையாகக் கிடைத்துள்ளது. அதனால், நேற்று இரவே பெரும்பாலானவர்கள் சென்னையில் இருந்து தங்கள் சொந்த ஊர் நோக்கி பயணத்தைத் தொடங்கினார். அது மட்டுமல்லாமல், நேற்றிலிருந்தே சிறப்புப் பேருந்துகளும் இயக்க ஆரம்பித்துவிட்டன.

தினசரி இயக்கக் கூடிய 2,275 பேருந்துகளைத் தவிர, நேற்று 5,163 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. மொத்தம் 14,263 பேருந்துகள் இந்தாண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து மட்டும் இயக்கப்படவுள்ளன. மற்ற ஊர்களில் இருந்து 10,445 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. இதற்காக, சென்னையில் 30 கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளன. சிறப்புப் பேருந்துகளில் செல்வதற்காக 1.38 லட்சம் பேர் முன்பதிவு செய்திருந்தனர். கோயம்பேடு, கேகேநகர், மாதவரம், தாம்பரம் சானிடோரியத்திலிருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

நேற்றிரவு மட்டும் ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் சென்னையில் இருந்து கிளம்பிச் சென்றுள்ளனர். கடந்த பொங்கல் பண்டிகையின்போது, தமிழக அரசுக்கு 17.47 கோடி ரூபாய் வருமானம் கிடைத்தது.

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மக்களுக்கு வழிகாட்டுவதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நேற்றிரவு மக்கள் கூட்டம் அலைமோதியது. இன்று காலையிலும் மக்கள் தொடர்ந்து பயணம் செய்து கொண்டு இருக்கின்றனர். சரியான முன்னேற்பாடுகளால் போக்குவரத்து நெரிசல் அதிகளவில் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.

Source: Minambalam.com