Go to ...
RSS Feed

காணொளியில் கூறப்பட்டது உண்மையில்லை: முதல்வர் விளக்கம்! …5 நிமிட வாசிப்புகொடநாடு சம்பவம் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள காணொளியில் கூறியிருப்பதில் உண்மைய…


கொடநாடு சம்பவம் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள காணொளியில் கூறியிருப்பதில் உண்மையில்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு 2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கொடநாடு எஸ்டேட்டில் காவலாளி கொல்லப்பட்டு, முக்கிய ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டன. கொள்ளையில் சம்பந்தப்பட்ட டிரைவர் கனகராஜ் உள்ளிட்டோர் விபத்து, தற்கொலை என அடுத்தடுத்து மரணமடைந்தனர். இந்த விவகாரத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை குற்றம் சாட்டியுள்ளார் தெகல்கா இதழின் முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல். இதுதொடர்பான ஆவணப் படம் ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக முதல்வர் விளக்கம் அளிக்க வேண்டுமெனவும், பதவி விலக வேண்டுமெனவும் திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியிருந்தார்.

இதுதொடர்பாக இன்று (ஜனவரி 12) விளக்கம் அளித்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “கொடநாடு எஸ்டேட் சம்பவத்தில் என்னை சம்பந்தப்படுத்தி செய்தி வெளியிட்டுள்ளார். இது முற்றிலும் உண்மைக்கு மாறானது. இந்த செய்தியை வெளியிட்டவர்கள் மீதும், இவர்களுக்கு பின்புலமாக உள்ளவர்கள் குறித்து கண்டறியப்பட்டு, அவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இதுதொடர்பாக நேற்றே சென்னை காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல் துறை சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளும்” என்று தெரிவித்தார்.

“கொடநாடு எஸ்டேட் சம்பவத்தில் 10 பேர் கைது செய்யப்பட்டு வழக்கு நீதிமன்றத்தில் நடந்துவருகிறது. குற்றவாளிகள் நீதிமன்றத்திற்கு 22 முறை சென்று வந்துள்ளனர். நீதிமன்றத்தில் ஏதும் சொல்லாதவர்கள், தற்போது புதிதாக எதையோ சொல்லி வழக்கை திசைதிருப்பப் பார்க்கிறார்கள். வரும் பிப்ரவரி 2ஆம் தேதி இவ்வழக்கு விசாரணைக்கு வரவுள்ளது.இவர்களுக்கு பின் யார் இருக்கிறார்கள் என்பதை விரைவில் கண்டறிவோம். போக்சோ, சீட்டீங், ஆள்மாறாட்டம், திருட்டு, கூலிப்படை வழக்கு என இந்த குற்றவாளிகள் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன” என்று விமர்சித்த முதல்வர்,

கட்சி நிர்வாகிகளிடம் ஆவணங்களைப் பெற்று ஜெயலலிதா கொடநாடு எஸ்டேட்டில் வைத்திருந்ததாகவும், அதனை எடுப்பதற்காக இவர்கள் சென்றதாகவும் காணொளியில் சொல்லியிருக்கிறார்கள். ஜெயலலிதா எந்தவொரு ஆவணத்தையும், எந்த நிர்வாகியிடமிருந்தும் எப்போதும் பெற்றதில்லை. கட்சி நிர்வாகிகளை குடும்ப உறுப்பினராக பாவிக்கக் கூடியவர் ஜெயலலிதா. அவருக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் செய்தி வெளியிட்டிருப்பது வண்மையாகக் கண்டிக்கத்தக்கதாகும் என்றும் தெரிவித்தார்.

மேலும், “இதில் அரசியல் பின்புலம் உள்ளதென நான் கருதுகிறேன். அரசியலில் நேரடியாக எங்களை எதிர்கொள்ள முடியாத திராணியற்றவர்கள்தான் இப்படிப்பட்ட கோழைத்தனமான குறுக்குவழியைக் கையாள்வார்கள்” என்றும் முதல்வர் விமர்சித்துள்ளார்.

முன்னதாக இதுதொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவிக்கையில், “முன்னாள் முதல்வர் ஜெ ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில், கடந்த 2017 ஏப்ரலில் நடந்த கொள்ளை சம்பவத்திலும், இதன் தொடர்ச்சியாக ஜெ ஜெயலலிதாவின் தேர்(கார்) டிரைவர் கனகராஜ் உட்பட 5 பேர் கொலை செய்யப்பட்ட குற்றச் சம்பவத்திலும் முதலமைச்சர் திரு எடப்பாடி கே பழனிசாமிக்கு பங்கிருக்கிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்தக் குற்றச் சம்பவங்களின் நிழல், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மீது விழுந்துள்ளது. இருப்பினும் அவர் எதுவுமே நடக்காதது போல் அமைதி காத்து வருவது ஆரோக்கிமான செயல் அல்ல. புது டெல்லி செய்தியாளர்கள் சந்திப்பில் முன் வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக முதலமைச்சர் வாய் திறந்து பேச வேண்டும். பொது மக்களிடம் விளக்க வேண்டும்” என்று வலியுறுத்தியிருந்தார். தன் மீதான குற்றச்சாட்டுக்கு முதலமைச்சர் உடனடியாக விளக்கம் தர வேண்டும் விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியிருந்தார்.

Source: Minambalam.com