Go to ...
RSS Feed

நாமகிரிப்பேட்டை பகுதியில் 200 காளைகள் தயார் ஜல்லிக்கட்டு நடத்த முடியாமல் கிராம மக்கள் ஏமாற்றம்


*கடுமையான விதிமுறைகளை தளர்த்த கோரிக்கை

நாமகிரிப்பேட்டை : நாமகிரிப்பேட்டை பகுதியில் ஜல்லிக்கட்டுக்காக 200க்கும் மேற்பட்ட  காளைகளை வளர்த்து வருகின்றனர். ஆனால், அரசின் கடுமையான விதிமுறையால்  கிராமங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த முடியவில்லை என காளை வளர்ப்போர்  தெரிவித்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை ஒன்றியம்  ஆயில்பட்டி, வேப்பாங்கவுண்டன்புதூர், கல்லாத்துக்காடு, ஊனந்தாங்கல்,  கரியாப்பட்டி, முள்ளுக்குறிச்சி, மளையாளப்பட்டி உள்பட 20க்கும் மேற்பட்ட  கிராமங்களில், ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையையொட்டி தை முதல் வாரத்தில்  இருந்து, ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன், ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்த போதும், இப்பகுதியில் அதிகளவில்  காளைகளை வளர்த்து வந்தனர். தற்போது, அரசு அனுமதித்த போதிலும், கடும்  விதிமுறைகள் காரணமாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த முடியாமல் காளைகள்  வளர்ப்போரும், மாடுபிடி வீரர்களும் ஏமாற்றமடைந்துள்ளனர்.

இதுகுறித்து  காளைகள் வளர்ப்போர் கூறியதாவது:

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை,  ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த இதுபோல கடுமையான விதிமுறைகள் கிடையாது.  ஆனால், தற்போது ஜல்லிக்கட்டு நடத்த இரண்டு மாதங்களுக்கு முன்பே மாவட்ட  நிர்வாகத்தில் அனுமதி பெறவேண்டும். சுமார் 2 எக்கர் பரப்பளவில் திடல்  அமைத்து, சுற்றியும் மரக்கிட்டி கட்ட வேண்டும். காளைகள் மற்றும் மாடுபிடி  வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும். போட்டி நடத்துபவர்கள்  முன்வைப்பு தொகை செலுத்த வேண்டும் என தெரிவிக்கின்றனர். இதனால் ஜல்லிக்கட்டு நடத்த ₹10 லட்சம் வரை செலவாகிறது. கிராம மக்களால் இவ்வளவு பெரிய தொகையை செலவு செய்ய முடியவில்லை.

இங்கு  காளைகள் வைத்திருப்பவர்கள் அனைவரும் விவசாயிகள். இப்பகுதியில் ஜல்லிக்கட்டு  நடைபெற்றால், நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்கும் என்பது ஐதீகம்.  இதுபோன்ற கடுமையான விதிமுறைகள் இருப்பதால், ஜல்லிக்கட்டு நடத்த முடியவில்லை.  எனவே, கிராமத்திற்கேற்ப விதிமுறைகளை தளர்த்தி, ஜல்லிக்கட்டு  நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Source: Dinakaran

Tags: