Press "Enter" to skip to content

தொடர்ந்து கழிவுநீர் கலப்பு, துணிகள் வீச்சு தாமிரபரணி தண்ணீர் 20 ஆண்டுகளில் நஞ்சாக மாறும் அபாயம்

*சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கை

நெல்லை :  தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பதும், அழுக்கு துணிகள் வீச்சும் தொடர்கதையாவதால் இன்னும் 20 ஆண்டுகளில் நீரை பயன்படுத்த முடியாத நஞ்சாக மாறும் வாய்ப்புள்ளதாக  நீரியல் ஆய்வு விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.   வற்றாத ஜீவநதியாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பாய்ந்து வளம்கொழிக்கும் தாமிரபரணி புண்ணிய நதிகளில் முதன்மையானதாகத் திகழ்கிறது. நதிநீர் பயன்பாட்டுக்காக அண்டை மாநிலங்களின் தயவை எதிர்பார்க்க வேண்டிய அவசியம் இல்லாதது, அனைவரது  பாவங்களையும் தானே சுமந்து போக்கும் கங்கையே, தன்பாவம் நீங்க இங்கு புனித நீராடி செல்வது உள்ளிட்ட பல்வேறு புராண சிறப்புகள் தாமிரபரணியை சாரும்.

நெல்லை மாவட்டம் பாபநாசம் அடுத்த பொதிகை மலையில் உற்பத்தியாகி சுமார் 120 கி.மீ. தொலைவு பாய்ந்து பல லட்சக்கணக்கான விளை நிலங்களை வளப்படுத்தி, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் விளங்கி வருகிறது.  பல்லாண்டுகளாக பரந்து விரிந்து பாய்ந்த நதி, முறையான பராமரிப்பின்றியும், இருகரைகளிலும் ஆக்கிரமிப்புகளாலும் காலப்போக்கில் சுருங்கிக் கொண்டே  வருகிறது.

தாமிரபரணி சமதளத்தை தொடும் பாபநாசத்தில் துவங்கி புன்னக்காயல் வரையிலும் பல இடங்களில் தொழிற்சாலைகளின் கழிவும், குடியிருப்புகளின் கழிவுநீரும் ஓடைகள் வழியாக நேரிடையாக ஆற்றில் கலந்து பல்வேறு சுகாதார கேடுகளை ஏற்படுத்தி வருகிறது. இதுதவிர நதி முழுவதும் அமலைச் செடிகளும், சீமை கருவேல மரங்களும், நெகிழி (பிளாஸ்டிக்) கழிவுகளும் ஆக்கிரமித்துள்ளன.

இதனால் இந்நதியில் பல இடங்களில் குளிப்பவர்களுக்கு தோல் வியாதிகளும், நீரை காய்ச்சாமல் குடிப்பவர்களுக்கு உணவுக் குழாயில் அலர்ஜி உள்ளிட்ட பல்வேறு வியாதிகளும் பரவி வருவதாக புகார் எழுந்துள்ளது. இதுதவிர பல இடங்களில் விழிப்புணர்வின்றி ஒரு சிலரால் அழுக்கு படிந்த துணிகளும், குப்பைகளும் நதியில் கொட்டப்பட்டு வருகின்றன.
தாமிரபரணி நதியில் 144 ஆண்டுகளுக்கு பின்பு கடந்த அக்டோபர் மாதம் 11ம் தேதி முதல் 22ம் தேதி வரை மகாபுஷ்கரணி விழா நடத்தப்பட்டது.

இதனால் பாபநாசம் முதல் புன்னகாயல் வரை பல இடங்களில் ஆற்றின் கரையோரங்கள் தொண்டு நிறுவனங்கள், பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்பினரால் சுத்தப்படுத்தப்பட்டது. இதனால் ஒரு மாதம் வரை சுத்தமாக பராமரிக்கப்பட்ட தாமிரபரணி ஆறு கழிவு நீராலும், ஆற்றில் வீசப்படும் குப்பைகளாலும், பழைய துணிகளாலும் மீண்டும் பாழ்பட்டு வருகிறது.  பல இடங்களில் உள்ளாட்சி அமைப்பினரின் அக்கறையின்மையால் கழிவுநீர் நேரடியாக தாமிபரணி ஆற்றில் இணைகிறது. மேலும் கனரக வாகனங்கள், கால்நடைகளையும் ஆற்றில் இறக்கி சுத்தப்படுத்துகின்றனர். வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறியது போல் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு இருந்த சுத்தம் தற்போது நதியில் இல்லை என நீரியல் ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

 இதே நிலை நீடித்தால் இன்னும் 20 ஆண்டுகளில் தாமிரபரணி  ஆற்றுக்குடிநீர் பயன்படுத்த முடியாத நிலையில் நஞ்சாக மாறும் அபாயம் ஏற்பட  வாய்ப்புள்ளதாக  நீரியல் ஆய்வு விஞ்ஞானிகளும், சமூக ஆர்வலர்களும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நம் கண்ணுக்கு முன்னே தாமிரபரணி நதி மாசுபடுவது குறித்து பாளை சதக்கத்துல்லா கல்லூரி வேதியியல் துறை பேராசிரியரும், நிலத்தடிநீர் குறித்து சிறப்பு வகுப்புகள் நடத்தி வருபவருமான கமாலுதீன் கூறுகையில், ‘‘பொதுவாக ஒவ்வொரு நதியிலும் இயற்கையாக நுண்ணுயிரிகள் நிறைந்து காணப்படும்.

இதே போல் தாமிரபரணியிலும் வரப்பிரசாதமாக உள்ள உயிரிகள், ஆற்றில் சேரும் குப்பைகள், கழிவுகளால் ஆறு மாசுபடுவதை தடுக்கும் பணியில் ஈடுபடுகின்றன. ஆனால், முறையான பராமரிப்பு இல்லாததோடு கால்நடைகள் மற்றும் ஒரு சில விலங்குகளின் கழிவுகளும், சாக்கடை மற்றும் மனிதகழிவுகளும் அதிக அளவில் ஆண்டுக்கு ஆண்டு கலப்பதால் நதியின் பாதுகாப்பு படையாகத் திகழும் நுண்ணுயிரிகள் அழியும். பின்னர் படிப்படியாக தாமிரபரணி தண்ணீரே நஞ்சாக மாறும் அபாயம் உள்ளது. இன்னும் 20 ஆண்டுகளில் நதியின் நிலை எப்படியிருக்கும் என்று நினைக்கவே அச்சமாக உள்ளது’ என்றார்.

கடும் நடவடிக்கை தேவை

தாமிரபரணிக்கு மகாபுஷ்கரணி விழா துவங்கும் முன் நெல்லை, தூத்துக்குடி மாவட்ட நிர்வாகமும், உள்ளாட்சி அமைப்புகளும் நதியில் மாசு கலக்காமலும், குப்பைகள் கொட்டாமலும் தடுத்து கண்காணித்தனர். ஆனால் புஷ்கர விழா நிறைவடைந்ததும் அவர்களே பல இடங்களில் கழிவுகளை நதியில் கொட்டி வருகின்றனர். மக்கள் தொகை அதிகமுள்ள பல நகரங்களில் பாதாள சாக்கடை திட்டம் நடைமுறையில் இல்லை.

கழிவுநீரை சுத்திகரித்து மீண்டும் மறு பயன்பாட்டிற்கு வழங்கும் திட்டமும் செயல்படவில்லை. இதனால் நதியில் தினமும் பல லட்சம் லிட்டர் அளவிற்கு கழிவுநீர் கலப்பது வேதனையளிக்கிறது. இதுதவிர பல இடங்களின் ஆற்றங்கரையில் ஆக்கிரமித்து தனியார் தோட்டம் அமைத்துள்ளனர். செங்கல் சூளைகள் இயங்குகின்றன. சில இடங்களில் தோட்டங்கள் அமைத்து அதன் வழியாக மணல் கடத்தலிலும் ஈடுபடுகின்றனர்.

உயர்நீதிநீதி மன்றத்தில் வழக்கு

தாமிரபரணி ஆறு முழுவதும் படர்ந்து காணப்படும், ஆகாயத்தாமரை, நீர்கருவை, வேலிகாத்தான் போன்ற செடிகள் அதிக அளவில் நீரை உறிஞ்சும் செடிகளாகும். இதன்காரணமாக ஆற்றில் ஓடும் நீரின் அளவு குறைவது மட்டுமல்லாமல் நீரின் தரமும் குறைகிறது. தேவையற்ற தாவரங்கள் ஆற்றின் குறுக்கேயும், கரை ஓரங்களிலும் வளர்ந்து நீரோட்டத்தை குறைக்கின்றன. தேவையற்ற தாவரங்களால், குப்பைக் கழிவுகளால் நோய் கிருமிகளின் தாக்கம் ஏற்பட்டு பொதுமக்கள், கால்நடைகள், வனவிலங்குகளுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, தாமிரபரணி ஆற்றில் உள்ள தேவையற்ற தாவரங்களை அகற்றவும், குப்பைக் கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்கவும் உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி உயர்நீதிநீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது .

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »