Go to ...
RSS Feed

மெட்ரோவில் பிக்பாக்கெட்: 94% பேர் பெண்கள்!3 நிமிட வாசிப்புடெல்லி மெட்ரோவில் நடக்கும் பிக்பாக்கெட் தொடர்பாகக் குற்றம்சாட்டப்படுபவர்களில் 94 சதவிகிதம் ப…


டெல்லி மெட்ரோவில் நடக்கும் பிக்பாக்கெட் தொடர்பாகக் குற்றம்சாட்டப்படுபவர்களில் 94 சதவிகிதம் பேர் பெண்கள் என்று ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

இது குறித்து மத்திய தொழில் துறை பாதுகாப்புப் படை(CISF) வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில், டெல்லியில் 2017ஆம் ஆண்டில் அதிகப்படியான பிக்பாக்கெட் புகார்கள் வந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 2017ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 1,298 பேர் பிக்பாக்கெட் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். 2018ஆம் ஆண்டில் இது 498 ஆக குறைந்துள்ளது. இதில் 470 பேர் பெண்கள், 28 பேர் ஆண்கள். டெல்லி மெட்ரோவில் பிடிபட்ட பிக்பாக்கெட் வழக்கில் 94 சதவிகிதம் பேர் பெண்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பாதுகாப்பு அதிகாரிகள் கூறுகையில், மாதம் சராசரியாக 40 பேர் பிக்பாக்கெட் வழக்கில் கைதாவதாகத் தெரிவித்தனர். “பர்ஸ், லேப்டாப், கைபேசிகள் போன்றவற்றை இவர்கள் திருடுவதாகப் புகார் பதிவாகியுள்ளது. இதில், பெண்கள்தான் அதிகமாகப் பிடிபடுகின்றனர்” என்று தெரிவித்துள்ளனர்.

இந்த பெண்கள் பெரும்பாலும் குழந்தைகளுடன் தொடர் வண்டியில் ஏறுகின்றனர். சில நேரங்களில் மற்றவர்களின் கைப்பைக்குள் கைவிட்டு திருடிச் செல்கின்றனர். அப்படிச் செய்யும்போது யாராவது பார்த்துவிட்டால் உடனே குழந்தையைத் திட்டிவிட்டு, ‘மன்னித்துவிடுங்கள் தெரியாமல் செய்துவிட்டான்’ என்று கூறி சமாளித்து விடுகின்றனர்.

பிக்பாக்கெட்டில் ஈடுபடுபவர்கள் ஒரு குழுவாகவும் செயல்படுகின்றனர். ஒரு பெண் சம்பந்தப்பட்டவர்களிடம் பேச்சு கொடுத்து, அவரின் கவனத்தைத் திசை திருப்பிக் கொண்டிருக்கும்போது மற்றொரு பெண் திருடுகிறார். உடனே அந்த பொருளை இன்னொருவரிடம் கொடுத்து, அந்த பொருளை அங்கிருந்து எடுத்துச் சென்றுவிடுகின்றனர். இவர்கள் பிடிபட்டாலும், கையில் எந்த பொருளும் இல்லாததால் குற்றம் நிரூபிக்கப்படுவதில்லை. திருட்டில் ஈடுபட்டவர்கள் கூறியதை வைத்து இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

Source: Minambalam.com