Press "Enter" to skip to content

இலங்கை நீதிமன்றத்தால் 8 மீனவர்கள் விடுவிக்கப்பட்ட நிலையில் 9 பேர் கைது: மீனவர்கள் அதிர்ச்சி

புதுக்கோட்டை: இலங்கை நீதிமன்றத்தால் 8 மீனவர்கள் விடுவிக்கப்பட்ட நிலையில் தமிழக மீனவர்கள் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன் இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 8 பேரை இலங்கை நீதிமன்றம் இன்று விடுதலை செய்தது. இதேபோல் கோட்டைபட்டினம் பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற ரனீசன், ராஜா, விஜி, மணிகண்டன் ஆகிய 4 மீனவர்களையும் கடந்த 7-ம் தேதி இலங்கைக் கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றனர். இலங்கைக் கடற்படையினரின் விசாரணைக்குப் பின் ஊர்க்காவல் துறை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டனர்.

இந்நிலையில், இன்று ஊர்க்காவல் துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட தமிழக மீனவர்கள் 8 பேரையும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இலங்கை அரசின் பரிந்துரையின் பேரில் ஊர்க்காவல் துறை நீதிமன்றம் விடுதலை செய்தது. மேலும், இவர்கள் சென்ற படகுகள் தொடர்பான வழக்கை இம்மாதம் 28-ம் தேதிக்கு ஒத்தி வைத்த நீதிபதி சூட்சன், அன்றைய தினம் அந்தப் படகுகளின் உரிமையாளர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகவும் உத்தரவிட்டார். இதையடுத்து இலங்கை நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட கோட்டைபட்டினம் மற்றும் ஜெகதாபட்டினம் மீனவர்கள் ஒரு சில தினங்களில் சொந்த ஊர் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

நெடுந்தீவுக்கு வடகிழக்கே லைட்ஹவுஸ் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் சதீஷ், அஜீத், தர்மராஜ், ராமு ஆகிய 9 மீனவர்களை எல்லைதாண்டி மீன்பிடித்ததாக கைது செய்து அவர்களிடமிருந்து 2 படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் கைது செய்யப்பட்ட மீனவர்களை தேரை (காரை) நகர் கடற்கரை முகாமில் வைத்து இலங்கை கடற்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். விடுதலை செய்யப்பட்ட 8 மீனவர்கள் நாடு திரும்பாத நிலையில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளது, மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »