Press "Enter" to skip to content

நாடு முழுவதும் கடந்த 5 ஆண்டுகளில் கருத்து சுதந்திரம் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது: ‘தி இந்து லிட் ஃபார் லைஃப்’ விழாவில் முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஷோரி கருத்து

நாடு முழுவதும் கடந்த 5 ஆண்டுகளில் கருத்து சுதந்திரம் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது என்று ‘தி இந்து லிட் ஃபார் லைஃப்’ இலக்கிய விழாவில் முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஷோரி தெரிவித்தார்.

‘தி இந்து லிட் ஃபார் லைஃப்’ மூன்று நாள் இலக்கிய விழா சென்னை சேத்துப்பட்டில் லேடி ஆண்டாள் பள்ளி வளாகத்தில் உள்ள ஸ்ரீ முத்தா வெங்கடசுப்பாராவ் கான்சர்ட் ஹாலில் நேற்று தொடங்கியது. ‘தி இந்து’ குழுமம் சார்பில் நடத்தப்படும் இலக்கிய விழாவின் 9-வது ஆண்டு இது.

தொடக்க விழாவை ‘தி இந்து’ ஆங்கில நாளிதழின் சீனியர் அசோசியேட் எடிட்டர் ஷாலினி அருண் தொகுத்து வழங்கினார். ‘இந்து குழுமம்’ மற்றும் ‘தி இந்து லிட் ஃபார் லைஃப்’ இயக்குநர் முனைவர் நிர்மலா லக்‌ஷ்மண் வரவேற்புரை ஆற்றினார். மூத்த பத்திரிகையாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அருண் ஷோரி தலைமை வகித்து தொடக்க உரை நிகழ்த்தினார். ‘இந்து’ என்.ராம், ‘தி இந்து’ ஆங்கில நாளிதழின் ஆசிரியர் முகுந்த் பத்மநாபன் ஆகியோரும் உரையாற்றினர்.

அருண் ஷோரி தனது தொடக்க உரையில் கூறியதாவது:இந்தியாவில் பதிப்பிக்கப்படும் புத்தகங்களின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளில் பன்மடங்கு அதிகரித்துள்ளது. புதிதாக பல பதிப்பகங்கள் வருகின்றன. புத்தகம் வாசிப்போர் எண்ணிக்கையை குறைத்து மதித்துவிட முடியாது. கடந்த ஆண்டு ‘லிட் ஃபார் லைஃப்’ விழாவில் 30-35 ஆயிரம் பேர் பங்கேற்றதாகவும் இந்த ஆண்டு 35-40 ஆயிரம் பேர் பங்கேற்கக்கூடும் என்றும் விழா ஒருங்கிணைப்பாளர்கள் கூறினர். இது ஒருபுறம் இருக்க, மறுபுறம் சகிப்பின்மையும் அதிகரிக்கிறது. தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தியதற்காக பலர் கொல்லப்பட்டுள்ளனர்; சட்டத்தின் முன்பு குற்றவாளியாக நிறுத்தப்பட்டுள்ளனர். புத்தகம் எழுதியவர்கள் வழக்குகளை எதிர்கொண்டுள்ளனர்.

மகாராஷ்டிராவில் மராட்டிய மன்னர் சிவாஜி பற்றிய ஒரு புத்தகத்துக்கு எதிராக வன்முறை வெடித்தது. மும்பையில் நடந்த ஒரு நிகழ்வில் இதுபற்றிய பேசிய அப்போதைய பிரதமர் வாஜ்பாய், ‘‘ஒரு புத்தகத்துக்கு, அதைவிட நல்ல புத்தகம் மூலம்தான் பதில் அளிக்க வேண்டும்’’ என்றார்.

அங்கிருந்து நாம் வெகுதூரம் வந்துவிட்டோம்.கடந்த நான்கு, ஐந்து ஆண்டுகளில் கருத்துகள், சுதந்திரம், இவற்றைப் பாதுகாக்கும் அமைப்புகள் ஆகியவை மீது இவ்வளவு பரவலாக, அமைப்புரீதியாக, வெளிப்படையான தாக்குதல்கள் வேறு எப்போதும் இருந்ததில்லை என்று தோன்றுகிறது. மறுபுறம் ஊடகங்களும் இதைப் பார்த்துக்கொண்டு அமைதிகாக்கின்றன. பல ஊடகங்கள் அச்சுறுத்தல் இல்லாவிட்டாலும் பேராசையால் அமைதிகாக்கின்றன. ஊடகவியலாளர்களும் ஓரளவுக்கு மேல் சுதந்திரமாகச் செயல்பட முடியவில்லை. இந்தச் சூழலில் இது போன்ற இலக்கிய விழாக்கள்தான் கருத்து சுதந்திரத்தை உயர்த்திப்பிடிக்கின்றன.

கருத்து சுதந்திரத்தை ஒடுக்கும் முயற்சி நாட்டின் எந்த மூலையில் நடந்தாலும் நாம் பரவலாக பதிவு செய்ய வேண்டும். நாம் ஒருவருக்கு ஒருவர் துணை நிற்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

‘இந்து’ என்.ராம் பேசியதாவது:‘தி இந்து’ நாளிதழ் 140 ஆண்டு பாரம்பரியம் கொண்டது. தொடங்கப்பட்டபோது இந்திய சுதந்திரப் போராட்டத்துக்கு துணை நிற்பது அதன் பிரதான கடமையாக இருந்தது. அன்றுமுதல் இன்றுவரை மதச்சார்பின்மை, கருத்து சுதந்திரம், சமூகநீதியை உறுதிசெய்வது ஆகிய கொள்கைகளை சமரசமின்றிக் கடைபிடித்துவருகிறது.

பேச்சு சுதந்திரமும், கருத்து சுதந்திரமும் இன்று கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளன. நாட்டின் பல்வேறு பகுதிகளில் அவற்றின் மீது தாக்குதல்கள் நடக்கின்றன. பேச்சு சுதந்திரத்தையும், ஊடக சுதந்திரத்தையும் பாதுகாக்க, தற்போதைய சட்டங்கள் போதுமானதாக இல்லை.

மக்களவை பொதுத் தேர்தல் வரவுள்ளது. இந்த தேர்தல் முடிவுகள் மதச்சார்பின்மையை மட்டுமில்லாமல் பேச்சு, விமர்சனம் மற்றும் ஊடக சுதந்திரத்தைப் பாதுகாப்பதாக அமையும் என்று நம்புகிறேன். பேச்சு சுதந்திரம், கருத்து சுதந்திரம், வற்புறுத்தல் சக்திகளிடம் இருந்து சுதந்திரமாக வாழ்வதற்கான உரிமை ஆகிய நோக்கங்களுக்காக ‘தி இந்து’வின் ‘லிட் ஃபார் லைஃப்’ இலக்கிய விழாக்களை அர்ப்பணிக்க விரும்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

மதியம் நடைபெற்ற ‘ஆட்சி என்னும் பொறுப்பு’ என்ற அமர்வில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் சி.மகேந்திரன், மாநிலங்களவை திமுக குழு தலைவர் கனிமொழி எம்.பி., விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், காங்கிரஸ் முன்னாள் எம்.பி. பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்டோர் உரையாற்றினர். ஊடகவியலாளர் எஸ்.கார்த்திகைசெல்வன் ஒருங்கிணைத்தார்.

இந்த விழா ‘சென்னை கலை திருவிழா’ அமைப்பின் துணையுடன் நெகிழி (பிளாஸ்டிக்) பயன்பாடு இல்லாத ‘ஜீரோ-வேஸ்ட்’ விழாவாக நடத்தப்படுகிறது. தண்ணீர் பாட்டில் உட்பட நெகிழி (பிளாஸ்டிக்) பயன்பாடு அறவே தவிர்க்கப்பட்டது. விழாவில் துணிப்பை பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் 10 நாட்களின் ‘தி இந்து’ ஆங்கில நாளிதழ் பிரதிகளைத் தருபவர்களுக்கு ஒரு துணிப்பை வழங்கப்படுகிறது. ‘தி இந்து லிட் ஃபார் லைஃப்’ இலக்கிய விழா ஒருங்கிணைப்பு பணியில் தன்னார்வலர்களாக 150 மாணவர்கள் பங்கேற்றுள்ளனர்.

Source: The Hindu

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »