Press "Enter" to skip to content

‘கஜா’ புயல் பாதிப்பால் கோயம்பேடு பொங்கல் சிறப்பு சந்தைக்குடெல்டா மாவட்டங்களில் இருந்து கரும்பு வரத்து குறைவு: ஒரு கட்டு விலை ரூ.400 வரை உயர்வு

‘கஜா’ புயல் பாதிப்பு காரணமாக கோயம்பேடு சிறப்பு சந்தைக்கு டெல்டா மாவட்டங்களில் இருந்து கரும்புகள் வரவில்லை. அதனால் 15 கரும்புகள் கொண்ட கட்டு ரூ.400 வரை விலை உயர்ந்துள்ளது.

கோயம்பேடு மலர் சந்தை வளாகத்தில் கடந்த 8-ம் தேதி முதல் பொங்கல் சிறப்புச் சந்தை செயல் பட்டு வருகிறது. இதில் பொங்கல் பண்டிகைக்கு தேவையான பூஜை பொருட்கள் மற்றும் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வருகின் றன. பொங்கலுக்கு இன்னும் இரு நாட்கள் உள்ள நிலையில் இப்போதே பொதுமக்கள் பூஜை பொருட்களை வாங்க சந்தைக்கு வருவது அதிகரித்துள்ளது.

இந்த சிறப்புச் சந்தையில் மஞ்சள் செடிகள் ஒரு ஜோடி ரூ.20 முதல் 40 வரை, வாழைக் கன்றுகள் ஒரு ஜோடி ரூ.40, சாமந்தி பூ 1 முழம் ரூ.20, கதம்ப பூ, கனகாம்பரம், மல்லி ஆகியவை ஒரு முழம் தலா ரூ.25-க்கு விற்கப்படுகின்றன. ஒரு பூசணிக் காய் (சுமார் 5 கிலோ) ரூ.70, ஒரு தேங்காய் ரூ.20 முதல் ரூ.30, மாவிலை, ஆவாரம் பூக்கள் கொண்ட கொத்து ரூ.10, அருகம்புல் கட்டு ரூ.5, வாழைப்பழம் ஒரு டஜன் ரூ.40, ஒரு தார் ரூ.300, தென்னை ஓலை தோரணங்கள் கொத்து ரூ.10, ஒரு வாழை இலை ரூ.5-க்கு விற்கப்படுகின்றன.

சிறுவர்களுக்கான போகி மேளம் ரூ.30 முதல் ரூ.100 வரை விற்கப்படுகிறது. மேலும் சர்க்கரை வள்ளிக்கிழங்கு மற்றும் கருணைக் கிழங்கு ஒரு கிலோ தலா ரூ.40, மொச்சைக்காய், துவரைக்காய் தலா ரூ.50 என விற்கப்பட்டு வருகிறது.

கரும்பு விலை உயர்வு

இந்த ஆண்டு சந்தையில் கரும்பு மொத்த விலையில் 15 கரும்புகள் கொண்ட கட்டு அவற்றின் தரத்துக்கு ஏற்ப ரூ.250 முதல் ரூ.400 வரை விற்கப்பட்டு வருகிறது. சில்லறை விலையில் ஒரு கரும்பு ரூ.40 வரை விற்கப்படுகிறது. கடந்த ஆண்டு 20 கரும்புகள் கொண்ட கட்டு ரூ.300 வரை விற்கப்பட்டது. இந்த ஆண்டு கரும்புகளின் எண்ணிக்கை குறைந்திருப்பதுடன், அவற்றின் விலையும் உயர்ந்துள்ளன.

இதுதொடர்பாக கோயம்பேடு சந்தையில் கரும்பு விற்பனை செய்துவரும் மதுரை மேலூரைச் சேர்ந்த பி.சுரேஷ் கூறியதாவது:

ஆண்டுதோறும் இந்தச் சந்தைக்கு 30 சதவீத கரும்பு டெல்டா மாவட்டங்களில் இருந்து வரும். கஜா புயல் சேதம் காரணமாக இந்த ஆண்டு டெல்டா மாவட்டங்களில் இருந்து கோயம்பேடு சந்தைக்கு கரும்பு வரத்து குறைந்துள்ளது. அதன் காரணமாக பல வியாபாரி கள் தேனி, திண்டுக்கல், மதுரை, பண்ருட்டி, சேலம் உள்ளிட்ட பகுதி களில் இருந்து விவசாயிகளிடம் கரும்புகளை வாங்கி வந்து விற்கின்றனர். அப்பகுதிகளில் உள்ளூர் தேவை போகத்தான் விற்கின்றனர். அதனால் இந்த ஆண்டு கரும்பு விலை உயர்ந் துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

நேரடியாக விற்கலாம்

சந்தை ஏற்பாடுகள் தொடர்பாக கோயம்பேடு சந்தை நிர்வாகக் குழு முதன்மை நிர்வாக அலுவலர் எஸ்.ராஜேந்திரன் கூறும்போது, “விவசாயிகள் தாங்கள் விளை விக்கும் பொங்கல் பண்டிகை சார்ந்த விளைபொருட்களை இடைத்தரகு இன்றி, நேரடியாக இந்தச் சந்தையில் விற்கலாம். அதற்காக 3.5 லட்சம் சதுரடி பரப்பளவு இடம் தயார் செய்யப்பட்டுள்ளது. சந்தையில் பொருட்களை விற்பனை செய்ய குறைந்த கட்டணமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங் களுக்கு 044 – 24791133 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ள லாம்” என்றார்.

Source: The Hindu

More from செய்திகள்More posts in செய்திகள் »