Go to ...
RSS Feed

கேரளாவில் மனிதர்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்துவதால் ‘கிளிபோசேட்’ பூச்சிக்கொல்லிக்கு தடை


மனிதர்களுக்குப் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும் ‘கிளிபோசேட்’ பூச்சிக்கொல்லி மருந்துக்கு கேரள அரசு முழு தடை விதித்துள்ளது.

பயிர்களில் பூச்சிகள் தாக்குதல், களை போன்றவற்றை நீக்க, உலகளவில் ‘கிளிபோசேட்’ என்ற ரசாயன பூச்சிக் கொல்லிமருந்துகளைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்த பூச்சிக்கொல்லியை அமெரிக்காவைச் சேர்ந்த மான்சான்டோ என்ற நிறுவனம் உற்பத்தி செய்கிறது. இந்த மருந்தை தெளிப்பதன் மூலம் களைகள் கட்டுப்படுத்தப்பட்டு பூச்சிகளும் அழிந்தன. ஆனால், இதன் பாதிப்பு மனிதர்களுக்கும் ஏற்படுவதாக புகார்கள் எழுந்தன. கிளிபோசேட் பூச்சிக் கொல்லி மருந்து தெளிக்கப்பட்டு விளைவிக்கப்பட்ட பயிர்வகைகளை உண்ணும் மனிதர்கள் பல்வேறு பாதிப்புக்கு உள்ளாயினர். புற்றுநோய், சிறுநீரக கோளாறு போன்ற பாதிப்புகள் ஏற்படுவது தெரிய வந்ததால், கிளிபோசேட் பூச்சிக் கொல்லி மருந்துக்கு பல நாடுகள் தடை விதித்தன.

இந்தியாவில் ஆந்திராவிலும் இந்த மருந்துக்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், கிளிபோசேட் மருந்துக்கு கேரளாவிலும் முழு தடை விதிக்கப்பட்டுள்ளது. கிளிபோசேட் அல்லது கிளிபோசேட் ரசாயனம் கலந்த வேறு எந்த பூச்சிக் கொல்லி மருந்தையும் விற்கவோ அல்லது விநியோகிக்கவோ முழு தடை கொண்டு வரப்பட்டுள்ளது.

இதுகுறித்து கேரள சட்டப்பேரவையில் வேளாண் துறை அமைச்சர் வி.எஸ்.சுனில் குமார் நேற்று பேசும்போது, ‘‘கேரள மாநிலத்தில் பூச்சிக் கொல்லி மருந்துகளை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இயற்கை விவசாயத்தைஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அதன் ஒரு கட்டமாக தற்போது ‘கிளிபோசேட்’ பூச்சிக் கொல்லிக்குமுழு தடை கொண்டுவரப்பட்டுள்ளது’’ என்றார்.

இதன் மூலம், கடந்த 2011-ம் ஆண்டில் இருந்து இதுவரை கேரள மாநிலத்தில் தடை விதிக்கப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்துகளின் எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளது.

Source: The Hindu

Tags: