Press "Enter" to skip to content

ட்விட்டரில் விமர்சனம் செய்த விவகாரம்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பிரசாந்த் பூஷணுக்கு நோட்டீஸ்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 3 வாரத்தில் பதில் அளிக்க, பிரபல மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷணுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

சிபிஐ தற்காலிக இயக்குநராக எம்.நாகேஸ்வர ராவ் நியமிக்கப்பட்டார். இதுதொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத்தை விமர்சிக்கும் வகையில் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் ட்விட்டரில் கருத்துத் தெரிவித்திருந்தார். கடந்த பிப்ரவரி 1-ம் தேதி அவர் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘‘சிபிஐ இயக்குநர் நியமனம் தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் கூட்டம் நடந்ததாக போலியான ஆவணங்களை உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது. இதன்மூலம் உச்ச நீதிமன்றத்துக்கு தவறான தகவல்களை மத்திய அரசு அளித்துள்ளது’’ என்று கூறியிருந்தார்.

இது நீதிமன்ற அவமதிக்கும் செயல் என்று மத்திய அரசும் அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபாலும் கடந்த செவ்வாய்க்கிழமை உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அருண் மிஸ்ரா மற்றும் நவீன் சின்ஹா ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று விசாரித்தது. இந்த வழக்கில் 3 வாரத்தில் பதில் மனு தாக்கல் செய்ய பிரசாந்த் பூஷணுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் தொடர்பாக வழக்கறிஞரோ அல்லது வேறு ஒருவரோ விமர்சிக்க முடியுமா? அப்படி விமர்சித்தால், அது பொதுமக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தாதா என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். பின்னர் வழக்கை மார்ச் 7-ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.-

Source: The Hindu

More from செய்திகள்More posts in செய்திகள் »