Go to ...
RSS Feed

சபரிமலை: வீடு திரும்பிய கனகதுர்காவின் நகை, பணம் மாயம்; கணவர், மாமியார் மீது குற்றச்சாட்டு


சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் சென்றதால் கணவர் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட கனக துர்கா,வீடு திரும்பி வந்தபோது தனது நகைகள், பணம் மாயமாகி உள்ளதாகத் தெரிவித்துள்ளார். தனது கணவரும் மாமியாரும் அவற்றைத் திருடியிருக்கலாம் என்று குற்றம் சாட்டியுள்ளார்.

சபரிமலையில் அனைத்துப் பெண்களும் சாமி பார்வை செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு கேரளாவில் பலத்த எதிர்ப்பு கிளம்பி போராட்டங்கள் நடந்தன. கடந்த மாதம் 2-ம் தேதி கோழிக்கோடு கோயிலாண்டி பகுதியைச் சேர்ந்த பிந்து, மலப்புரம் அங்காடிபுரத்தைச் சேர்ந்த கனகதுர்கா ஆகிய இரு பெண்கள் சபரிமலைக்கு காவல் துறை பாதுகாப்புடன் சென்று ஐயப்பனைத் பார்வை செய்து பரபரப்பை ஏற்படுத்தினர்.

இதில் மலப்புரம் அங்காடிபுரத்தைச் சேர்ந்த கனகதுர்கா, சிவில் விநியோகம் துறையில் பணியாற்றி வருகிறார். இந்து அமைப்புகள் எதிர்ப்பு, வலது சாரி அமைப்புகளின் போராட்டம் ஆகியவற்றால், கடந்த இரு வாரங்களாக காவல் துறையினர் பாதுகாப்பில் மறைவிடத்தில் கனகதுர்கா தங்கி இருந்தார். ஆனால், கனகதுர்காவுக்கு கடும் எதிர்ப்பு இருந்து வந்தது.

கனக துர்கா தனது வீட்டுக்குச் சென்றபோது, வீட்டில் இருந்த கனக துர்காவின் மாமியாருக்கும், கனகதுர்காவுக்கும் தகராறு ஏற்பட்டது. சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் சென்றது குறித்து கனக துர்காவைக் கண்டித்த அவரின் மாமியார் அவர் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்பட்டது. அப்போது இருவரும் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர்.

இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சைக்குப் பிறகு கனக துர்காவின் மாமியாரும், கணவரும் அவரை வீ்ட்டுக்குள் சேர்க்க முடியாது எனக் கூறி வெளியேற்றி விட்டனர். இதனால் பெண்கள் பாதுகாப்பு  இல்லத்தில் அவர் தங்கினார். இதையடுத்து தனக்கு பாதுகாப்பு வழங்க கோரியும் வீட்டுக்கு செல்ல உத்தரவிடக்கோரியும் கனக துர்கா உள்ளூர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

இதனை விசாரித்த நீதிமன்றம் வீட்டுக்குச் செல்ல அவருக்கு முழு உரிமை உள்ளது  எனக்கூறி உத்தரவு பிறப்பித்து, காவல் துறையினர் பாதுகாப்பும் வழங்கியது. இதையடுத்து பெண்கள் பாதுகாப்பு இல்லத்தில் இருந்து அவர் தனது கணவர் வீட்டுக்குச் சென்றார். ஆனால் கனக துர்காவின் கணவர் தனது குழந்தைகளையும், தனது தாயையும் அழைத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி விட்டார். வீட்டை பூட்டி சாவியை உள்ளூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

இதைத்தொடர்ந்து கனகதுர்கா காவல் துறை காவலுடன் வீட்டுக்குச் சென்றார். அங்கிருந்த தனது நகைகள், பணம் மாயமாகி உள்ளதாகத் தெரிவித்துள்ளார். இதுகுறித்துப் பேசிய கனகதுர்கா, ”வீட்டில் இருந்த ஏராளமான வீட்டு உபயோகப் பொருட்களைக் காணவில்லை. என்னுடைய தங்க வளையல்களும், ஒரு செட் தோடும் மாயமாகியுள்ளது. ரொக்கமாக வைத்திருந்த 13 ஆயிரம் ரூபாய் பணமும் வீட்டில் இல்லை.

இவற்றை என்னுடைய கணவரும் மாமியாரும்தான் திருடியிருக்க வேண்டும். இதுகுறித்துப் புகார் கொடுக்க நான் விரும்பவில்லை” என்று தெரிவித்துள்ளார்.கனகதுர்கா புகார் கொடுக்காததால் வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Source: The Hindu

Tags: