Go to ...
RSS Feed

என் அனுமதி இல்லாமல் என்னை ஏன் பெற்றீர்கள்?- பெற்றோரின் மீது வழக்கு தொடுப்பதாக அறிவித்த இளைஞர்


என் அனுமதி இல்லாமல் என்னை ஏன் பெற்றீர்கள் என்று பெற்றோரின் மீது வழக்கு தொடுக்க உள்ளதாக மும்பையைச் சேர்ந்த 27 வயது இளைஞர் ரஃபேல் சாமுவேல் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள யூடியூப் காணொளியில், ”இந்த உலகத்துக்கு வரவேண்டுமா இல்லையா என்பதை முடிவெடுக்க குழந்தைகளுக்கு அதிகாரம் அளிக்கப்படுவதில்லை. இதனால் குழந்தைகளின் வாழ்க்கைக்கு பெற்றோர்கள்தான் உதவ வேண்டும்.

என்னுடைய போராட்டம் பூமிக்கு பாரத்தை அளிக்கும் இனப்பெருக்கத்துக்கு எதிரானது. இதனால் சூழலியல் சமநிலை பாதிக்கப்படுகிறது.

இந்தியா மற்றும் உலகில் வாழும் அனைவரும் தங்களின் அனுமதி இல்லாமலேயே அவர்கள் இந்த உலகத்துக்கு வந்ததை உணரவேண்டும். இதனால் எக்காலத்திலும் குழந்தைகள் பெற்றோருக்குக் கடமைப்பட்டவர்கள் அல்ல. இதனால் நாம் வாழ்வதற்கு நம்முடைய பெற்றோர்தான் பணம் தரவேண்டும்.

இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க உள்ளேன். என்னுடைய பெற்றோர் என்னுடன் நெருக்கமான உறவில்தான் இருக்கின்றனர். அவர்களின் முழு ஆதரவும் எனக்கு இருக்கிறது. ஆனால் நான் எழுப்பும் பிரச்சினை உலகளாவிய ஒன்று என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். இதன் பின்னணியில் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவது, சூழலியல் சமநிலையை உறுதிப்படுத்துவது ஆகியவையும் உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

குளிர் கண்ணாடி, போலி தாடி, மீசையோடு காணொளியில் தோன்றும் சாமுவேல், ”ஏதோ ஒரு நேரத்தில், உங்களின் பெற்றோர் நல்லவிதமாக நேரத்தை செலவழித்ததால்தான் நீங்கள் பிறந்திருக்கிறீர்கள். உங்களின் பெற்றோருக்கு எதுவும் செய்யக்கூடாது என்று தோன்றினால் எதையும் செய்யாதீர்கள். உண்மையாகவே அவர்களைக் கவனிக்க வேண்டும் என்றால் மட்டும் பார்த்துக்கொள்ளுங்கள். பெற்றோர் தங்களின் குழந்தைகளை முதலீடுகளாகவோ காப்பீட்டுத் திட்டங்களாகவோ நடத்தக்கூடாது” என்று தெரிவித்திருந்தார்.

இதே விவகாரம் தொடர்பாக தனது ஃபேஸ்புக் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவுக்கு ஏராளமானோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஒருவர், ”சாமுவேலை மனநல மருத்துவமனைக்கு அனுப்பவேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

Source: The Hindu

Tags: