Press "Enter" to skip to content

ஏர்போர்ட், திரைப்படக் கல்லூரி, சுகாதார மையங்கள்: அருணாச்சலில் ரூ.4000 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி

அருணாச்சலப் பிரதேசத்தின் தலைநகரமான இட்டாநகரில் நடந்த நிகழ்ச்சியில் ரூ.4000 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

ஹொல்லோங்கி பகுதியில் அமைக்கப்பட்ட க்ரீன்ஃபீல்டு விமான நிலையத்துக்கு அடிக்கல் நாட்டிய மோடி, லோஹித் மாவட்டத்தின் தெஸுவில் விமான நிலையத்தைத் திறந்துவைத்தார்.

அருணாச்சலப் பிரதேசத்துக்கான புதிய தூர்தர்ஷன் சேனலான டிடி அருண் பிரபாவையும் திறந்து வைத்துப் பேசினார்.

110 வாட் நீர்மின் ஆலையைத் தேசத்துக்கு அர்ப்பணித்த மோடி, ஜோட் பகுதியில் திரைப்படம் மற்று தொலைக்காட்சிக்கான இந்தியக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டினார். அத்துடன் ஐஜி பூங்காவில் நடந்த விழாவில் 50 சுகாதார மையங்களையும் காணொலிக் காட்சி மூலம் திறந்துவைத்தார்.

இத்திட்டங்களின் மொத்த மதிப்பு ரூ.4000 கோடி ஆகும்.

இதனிடையே பிரதமர் மோடியின் வருகைக்கு அசாம், அருணாச்சலப் பிரதேசம், திரிபுரா ஆகிய மாநிலங்கள் அதிருப்தி தெரிவித்துள்ளன. ஆளும் பாஜக அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அசாமில் மோடிக்கு கருப்புக்கொடி காட்டப்பட்டது.

இதுகுறித்துப் பேசிய அருணாச்சலப் பிரதேச காங்கிரஸ் குழுயின் பொதுச் செயலாளர் சேரா தயா, ’’நாங்கள் மோடியின் வருகைக்கு எதிராக செயல்படவில்லை. ஆனால் வடகிழக்கு மாநிலங்களில் வசிக்கும் உள்ளூர் மக்களை அச்சுறுத்தும் வகையில், மோடி அரசு கொண்டுள்ள மசோதாவால் அதிருப்தி அடைந்துள்ளோம்’’ என்றார்.

வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியா வந்து 6 ஆண்டுகளாக வசித்து வரும் இந்துக்கள், சமணர்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், பவுத்தர்களுக்கு குடியுரிமை வழங்க குடியுரிமை (திருத்தம்) மசோதா கொண்டு வரப்பட்டது. மக்களவையில் நிறைவேற்றப்பட்ட இச்சட்டத்திருத்தம் மாநிலங்களவையின் ஒப்புதலுக்காக காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Source: The Hindu

More from செய்திகள்More posts in செய்திகள் »