Press "Enter" to skip to content

மறைந்திருக்கும் உண்மைகள் வெளிவர அனைத்து வரலாறுகளையும் மறுவாசிப்பு செய்ய வேண்டும்: தியடோர் பாஸ்கரன் வலியுறுத்தல்

மறைந்திருக்கும் உண்மைகள் வெளிவரவும், மக்கள் வரலாறு படைக்கவும் அனைத்து வரலாறுகளும் மறு வாசிப்பு செய்யப்பட வேண்டும் என்று எழுத்தாளர் சு.தியடோர் பாஸ்கரன் வலியுறுத்தியுள்ளார்.

வரலாற்று ஆய்வாளர் ஆ.இரா.வேங்கடாசலபதியின் பொன்விழாவை முன்னிட்டு, காலச்சுவடு அறக்கட்டளை, கடவு, ‘தி இந்து – லிட் ஃபார் லைஃப்’ ஆகியவை இணைந்து நடத்தும் ‘விரிவும் ஆழமும் – ஆ.இரா.வேங்கடாசலபதி பங்களிப்புகள்’ என்ற தலைப்பிலான 2-ம் நாள் கருத்தரங்கம் கோட்டூர்புரத்தில் நேற்று நடைபெற்றது.

நிகழ்ச்சியின் தொடக்கமாக மாணவர்களுக்கு நூல்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன. தொடர்ந்து எழுத்தாளர் சு.தியடோர் பாஸ்கரன் பங்கேற்று பேசியதாவது:கோயில் கல்வெட்டுகளை வைத்து வரலாற்றை எழுதும்போது, உயர்சாதியினர், அரசர்கள், அரசியலைப் பற்றித்தான் தரவுகள் கிடைக்கும். மக்களைப் பற்றிய வரலாற்றை எழுத நாட்டார் பாடல், நாடகம், திரைப்பட, நடுகல் போன்ற புதிய மூலத் தரவுகளைப் பயன்படுத்தி எழுத வேண்டும்.

நெல்லை ஆட்சியர் ஆஷ் துரை, சுதந்திர போராட்டத்தில் கொல்லப்பட்டதாக வரலாறு சொல்கிறது. உண்மையில் சனாதன தர்மத்துக்கு இடையூறாக இருந்ததற்காகத்தான் அவர் கொல்லப்பட்டார் என்பதை ஆ.இரா.வேங்கடாசலபதி ஆய்வு செய்து எழுதியுள்ளார். அவர் வரலாற்றை மறு வாசிப்பு செய்ததன் மூலம்தான் அது சாத்தியமானது. அதனால் வரலாறுகள் அனைத்தும் மறு வாசிப்பு செய்யப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் ‘ஆ.இரா.வேங்கடா சலபதியின் பங்களிப்பு’ என்ற தலைப்பில் நடைபெற்ற முதல்அமர்வில் எழுத்தாளர் பெருமாள்முருகன் பங்கேற்று பேசும்போது,“கிடைத்த தரவுகளின் அடிப்படையில் வரலாறு எழுதப்படுகிறது. அதில் போதிய தரவுகள் கிடைக்காதபோது, வரலாற்றில் இடைவெளி ஏற்படுகிறது. அதை நிரப்பும் தரவுகளை ஆ.இரா.வேங்கடாசலபதி தேடித் தொகுத்து பதிப்பித்துள்ளார். அவை அவரது ஆய்வுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளன. அவரது பெரும்பாலான நூல்கள் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டதாக உள்ளன” என்றார்.

இதைத்தொடர்ந்து ஆ.இரா.வேங்கடாசலபதியின் மதிப்பீடு, எங்கள் ஆசிரியர், நட்பும் மதிப்பும், ஆங்கிலப் படைப்புகள், ஆளுமை ஆகிய தலைமைப்புகளில் உரை அமர்வுகள் நடைபெற்றன. ஆ.இரா.வேங்கடாசலபதி ஏற்புரை வழங்கினார். நிகழ்ச்சியின் இறுதியில் அகில இந்திய வானொலி உதவி இயக்குநர் பழ.அதியமான் நிறைவுரையாற்றினார்.

காலை முதல் இரவு வரை நடைபெற்ற நிகழ்ச்சியை பழ.அதியமான், ரீனா ஷாலினி, கிருஷ்ண பிரபு, ஹரிணி ராதா கிருஷ்ணன் ஆகியோர் தொகுத்து வழங்கினர்.

Source: The Hindu

More from செய்திகள்More posts in செய்திகள் »
Mission News Theme by Compete Themes.