Go to ...
RSS Feed

துண்டாக்கி வீசப்பட்ட சந்தியாவின் தலையை பெருங்குடி குப்பை கிடங்கில் தேடும் பணி தீவிரம்: மோப்ப நாய் உதவியுடன் 40 பேர் சோதனை


பெருங்குடி குப்பைக் கிடங்கில் காவல் துறை மோப்ப நாய் உதவியுடன் சந்தியாவின் தலையை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

சென்னை பெருங்குடி குப்பைக் கிடங்கில் கடந்த ஜனவரி 20-ம் தேதி ஒரு பெண்ணின் வலது கை மற்றும் 2 கால்கள் கண்டெடுக்கப்பட்டன. பெண்ணின் கையில் டிராகன் மற்றும் சிவன்-பார்வதி படங்கள் டாட்டூவாக வரையப்பட்டிருந்தன. அதை வைத்து கொலை செய்யப்பட்ட பெண்ணை அடையாளம் காணும் முயற்சியில் பள்ளிக்கரணை காவல் துறையினர் ஈடுபட்டனர்.

கொலை செய்யப்பட்ட பெண் தூத்துக்குடியைச் சேர்ந்த சந்தியா என்பது தெரியவந்தது. அவரது கணவர் பாலகிருஷ்ணனே சந்தியாவை கொலை செய்து, உடலை துண்டு துண்டாக வெட்டி 4 பைகளில் போட்டு ஜாபர்கான்பேட்டை, எம்ஜிஆர் நகர் குப்பை தொட்டிகளிலும், அடையாறு ஆற்றங்கரை ஓரத்திலும் வீசியது போலீஸாரின் விசாரணையில் தெரியவந்தது. அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அவரை காவல் துறையினர் கைது செய்தனர். கொலை செய்யப்பட்ட சந்தியாவின் இரண்டு கால்கள், வலது கை பெருங்குடி குப்பைத் தொட்டியில் கிடைத்தன.

பாலகிருஷ்ணனை கைது செய்த பின்னர், அவர் கொடுத்த தகவலின்பேரில் அடையாறு ஆற்றங்கரை ஓரத்தில் நடத்திய சோதனையில் சந்தியாவின் இடுப்பு முதல் முழங்கால் வரையுள்ள உடல் பகுதியை காவல் துறையினர் கண்டெடுத்தனர். மேலும், தலை மற்றும் இடது கையை தேடும் பணியில் காவல் துறையினர் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். அடையாறு ஆற்றங்கரையில் சோதனையை முடித்த காவல் துறையினர், பெருங்குடி குப்பை கிடங்கில் சோதனையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

நேற்று காவல் துறை மோப்ப நாய் டைசன் உதவியுடன் 4-வது நாளாக பெருங்குடி குப்பை கிடங்கில் சோதனை நடத்தப்பட்டது. 6 ஜேசிபி இயந்திரத்துடன், 10 தனிப்படை காவல் துறையினர், 30 துப்புரவு பணியாளர்கள் சந்தியாவின் தலை, இடுப்புக்கு மேலே உள்ள பகுதி, இடது கால் ஆகியவற்றை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Source: The Hindu

Tags: