Press "Enter" to skip to content

ஹெல்மெட் அணிந்து வந்தவர்களுக்கு மரக்கன்று வழங்கி அசத்திய காவல் துறையினர்

வாடிப்பட்டி: வாடிப்பட்டியில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு வாரவிழா பேரணியின் போது ஹெல்மட் அணிந்து வந்த இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு மரக்கன்று வழங்கி காவல் துறையினர் பாராட்டினர். மதுரை மாவட்டம் சமயநல்லூர் உட்கோட்ட காவல்துறை சார்பில் 30வது சாலை பாதுகாப்பு வாரவிழா வாடிப்பட்டியில் டிஎஸ்பி மோகன்குமார் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வாடிப்பட்டி பேரூராட்சி செயல் அலுவலர் கலையரசி, அலங்காநல்லூர் ஆய்வாளர் செல்வம், சமயநல்லூர் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கிரேசி சோபியா உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். நாகமலை புதுக்கோட்டை ஆய்வாளர் குருவெங்கட்ராஜ் வரவேற்றார். வாடிப்பட்டி மோட்டார் வாகன ஆய்வாளர் இளங்கோவன் சாலை விதிகள் குறித்து சிறப்புரையாற்றினார்.

முதலில் சாலை விதிகள் குறித்து பொதுமக்கள், ஆட்டோ, கால் டாக்ஸி ஓட்டுநர்கள் உள்ளிட்டோர் உறுதிமொழி எடுத்து கொண்டனர். அதனை தொடந்து நூற்றுக்கும் அதிகமான காவல் துறையினர் மற்றும் பொதுமக்கள் இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணிந்தவாறு விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தினர். வாடிப்பட்டி முக்கிய வீதிகள் வழியாக வலம்வந்த ஊர்வலம் காவல்நிலையம் சென்று முடிவடைந்தது. இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் மற்றும் கார்களில் இருக்கைப் பட்டை அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கு காவல் துறையினர் மரக்கன்று வழங்கி பாராட்டினர். சப் ஆய்வாளர் விஜய பாஸ்கர் நன்றி கூறினார்.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
Mission News Theme by Compete Themes.