Press "Enter" to skip to content

ஹைட்ரோகார்பன் மாநாடு: நொய்டாவில் நாளை மோடி தொடங்கி வைக்கிறார்

இந்தியாவின் முன்னோடி ஹைட்ரோகார்பன் மாநாடாகக் கருதப்படும் ‘பெட்ரோடேக் – 2019’ஐ உ.பி.யின் நொய்டாவில் நாளை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

‘பெட்ரோடேக் – 2019’, மத்திய அரசின், மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ள 13-வது சர்வதேச எண்ணெய் மற்றும் எரிவாயு மாநாடு மற்றும் கண்காட்சியாகும். இந்திய எண்ணெய் மற்றும் எரிவாயுத் துறையின் சமீபத்திய சந்தை  மற்றும் முதலீட்டாளர்களுக்கு உகந்த மாற்றங்கள் குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது.

பங்குதாரர் நாடுகளைச் சேர்ந்த 95-க்கும் மேற்பட்ட எரிசக்தித் துறை அமைச்சர்கள் மற்றும் சுமார் 70 நாடுகளைச் சேர்ந்த 7000 பிரதிநிதிகள் ‘பெட்ரோடெக்’ மாநாட்டில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக கிரேட்டர் நொய்டாவில் உள்ள இந்திய கண்காட்சி அரங்கில், சுமார் 20,000 சதுரமீட்டருக்கு மேற்பட்ட பரப்பளவில் கண்காட்சி ஒன்றும் நடத்தப்பட உள்ளது.

‘பெட்ரோடெக் 2019’ கண்காட்சியில்  13-க்கும் மேற்பட்ட நாடுகளின் அரங்குகளும், 40-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 750 நிறுவனங்களும் பங்குபெறவுள்ளன.  இந்தியாவில் உற்பத்தி செய்வோம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி என்பதை மையக் கருத்தாகக் கொண்டு இந்தக் கண்காட்சி நடத்தப்படுகிறது.

கடந்த காலத்தில், 12-வது ‘பெட்ரோடெக்’ மாநாட்டை, 2016 டிசம்பர் 5 அன்று பிரதமர் தொடங்கி வைத்தார். இந்நிலையில் நாளை உ.பி.யின் நொய்டாவில் உள்ள இந்தியா கண்காட்சி அரங்கில், ‘பெட்ரோடேக் – 2019’ஐ மோடி தொடங்கி வைக்கிறார்.

எரிசக்தி கிடைக்கச் செய்தல், எரிசக்தி சிக்கனம், நீடித்த எரிசக்தி, எரிசக்தி பாதுகாப்பு என்ற நான்கு தூண்களே இந்தியாவின் எரிசக்தி எதிர்காலத்திற்கான எனது தொலைநோக்கு என்று மோடி குறிப்பிட்டுள்ளார்.  பன்னாட்டு ஹைட்ரோகார்பன் நிறுவனங்கள் இந்தியாவிற்கு வந்து, இந்தியாவில் உற்பத்தி செய்யுமாறு அழைப்பு விடுத்த பிரதமர் மோடி, ஊழல் மற்றும் ஊழல்வாதிகளுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிப்பதை மாற்றியமைப்பதே தமது லட்சியம் என்றும் தெரிவித்துள்ளார்.  

Source: The Hindu